BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Sunday, July 10, 2005

அமீரகத் தொழிலாளிகளின் மதிய ஓய்வு....

அமீரகத்தின் அரசாங்கம் ஒரு முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

வெப்பம் மிகுந்த மாதங்களான ஜூலை, ஆகஸ்டு - இந்த இரண்டு மாதங்களிலும் வெளிப்புற வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, மதியம் 12.30 முதல் மாலை 4.30 வரை ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை வெயில் தாக்கும் புற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், ஒப்பந்த வேலை எடுத்துச் செய்யும் பெருநிர்வாகங்களும், அவர்களது பிரதிநிதிகளும் மிகக் கடுப்பாகி உள்ளனர். முதல் தாக்குதலாக, சிலர் குழுவாக இணைந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் - தாங்கள் பெருத்த நட்டத்திற்கு ஆளாவோம் என்றும் அதுபோக இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பல பணிகளும் கால தாமதத்திற்கு ஆளாகும் என்றும், அதனால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளன.

இந்த முதல் கட்ட தாக்குதலை மிக வெற்றிகரமாக சமாளித்து விட்டனர் அதிகாரிகள். உங்கள் லாபத்தை விட, தொழிலாளர்களின் உடல் நலம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு நான்கு மணி நேரமே வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறோம் என்றும் கூறி வந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இந்த உத்தரவை அமுல் படுத்துகிறார்களா என்று கண்டறிய காவல் துறையின் ஹெலிகாப்டர் ஊர்திகளில் இருந்து வானில் பறந்தவாறே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் சென்றுள்ளனர். இதை நாங்கள் பணி புரியும் பகுதியான துபாய் மெரினாவில் முதல் இரு நாட்கள் கண்டோம்.

எந்த வகையிலும் மாற்ற முடியாது என்றதும், பல நிர்வனங்கள் தங்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளன. அரப்டெக் என்ற கட்டிட நிர்மாண நிறுவனம் தங்கள் வேலைநேரத்தை அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கி மதியம் 12.00க்கு முடித்துக் கொண்டு, அடுத்த பணி துவக்கத்தை மாலை 4.00 முதல் அதிகாலை 2.00 வரைக்கும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் பணியை நிறைவு செய்து கொடுக்கவில்லையென்றால் - கட்ட வேண்டிய அபராதத் தொகையில் தள்ளுபடியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். !

இதுபோல மற்றுமொரு வகையிலும் அரசு இந்த நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளிக்கு கூடுதல் பணி கொடுக்கக் கூடாது என்று தான். முதல் வகை உத்தரவிற்கு இருந்த ஆதரவு இந்த இரண்டாவது வகை உத்தரவிற்குக் கிடைக்கவில்லை - காரணம் இது தொழிலாளியின் வருமானத்தில் கை வைக்கிறது. தொழிலாளர் உடல் நலத்திற்குக் கேடானது என்ற அதே காரணத்திற்காகத் தான் இது என்றாலும், நேரடியாகத் தங்கள் வருமானம் குறைகிறது என்பதனால், தொழிலாளிகள் மத்தியில் இதற்கு வரவேற்பு குறைவு தான். அதே சமயம் - நிர்வாகங்களும் வற்புறுத்தப்படுகின்றன - அதாவது, கூடுதல் பணி கொடுப்பதை விட, கூடுதலாக பணியாட்களை அமர்த்துங்கள் என்று நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இந்த கூடுதல் பணியாளர்களும் - ஒரே நாட்டில் இருந்து என்றல்லாமல் எல்லா நாடுகளிலிருந்தும் பரவலாக வரவேண்டும் என்றும் அந்த வகையில் தான் தேவையான விசாக்கள் வழங்கப்படும் என்றும் கூறிவிட்டனர். இப்பொழுது எங்கள் நிறுவனத்திலேயே முழுக்க முழுக்க இந்தியர்கள் என்ற நிலை மாறி இப்பொழுது சிங்களம். ஈழம், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என்று சர்வதேச மயமாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டங்களுடன், மற்றொரு சட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது - ஆம், அமீரகத்தின் மன்னராக கடந்த வருடம் முடிசூடிய திரு கலீஃபா, குழந்தைகளை ஒட்டக சவாரியில், பயன்படுத்தக் கூடாது என்று திட்ட வட்டமாக அறிவித்து, அந்த மாதிரி வரவழைக்கப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். உலக நாடுகள் பல நாட்களாக கூவி கூவி சொன்னாலும் இப்பொழுது தான் இது நடைமுறைக்கு வந்துள்ளது. அதிலும் இந்த வழக்கம் உள்ள அனைத்து அரபு நாடுகளிலும் முதலாவதாக.

இப்பொழுது அமீரகத்தை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லுவதை விட, முன்னேற்றத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்ட, மற்றைய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவே கருதலாம். ஏன் அதற்கு மேலும் கூட கருதலாம். ஏனென்றால் சில ஜனநாயக நாடுகளில் கிடைக்காத அனுகூலங்கள் மன்னராட்சி என்ற முறையிலும் கிடைக்கிறது. குறிப்பாக சட்டம் நிறைவேற்றப்படுவது - அறிவித்த அடுத்த நிமிடத்தில் இருந்தே நடைமுறைக்கு வந்து விடுகிறது. மேலும் அமைச்சர்களாகப் பணி புரியும் பலரும் இளைஞர்கள் - ஒரு பெண்மணியும் கூட உண்டு.

துடிப்பாக செயல்படும் இந்த இளைஞர் பட்டாளம் - தங்கள் நாட்டை முன்னேறிய நாடுகளில் ஒன்றாகப் பார்ப்பதை லட்சியமாகக் கொண்டே பணிபுரிகிறார்கள். விரைவிலேயே, அந்த நிலையை எட்டி விடுவார்கள் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home