இஸ்ரேலும், லண்டன் குண்டு வெடிப்புகளும்....
நடக்கப் போகிறது என்று ஆரூடம் கூறி எதிர்பார்த்திருந்தது நிகழ்ந்தே விட்டது.
அதுவும், வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருந்த நகரத்தின் மீது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உரிமம் பெற்ற இரண்டு நாட்களுக்குள், மீண்டும், அல்கொய்தா தன்னுடைய playing the spoilsport அசட்டுத்தனத்தைக் காட்டி விட்டது.
வழக்கம் போல கருத்துகள், விமர்சனங்கள், வசைபாடுதல்கள், அனுமானங்கள் எல்லாம் வலம் வருகின்றன. தீவிரவாதம் ஒரு கேன்சர் என்று விமர்சித்தாயிற்று. சரி, தீவிரவாதம் ஒரு புற்று நோய்தான். ஆனால், அதற்கு தீர்வு என்ன? அந்த புற்று நோய் எங்கிருக்கிறது? எங்கிருந்து அதை அகற்றும் பணியை ஆரம்பிப்பது?
அடிபட்டு, நொந்து போன டோனி பிளேருக்கு புற்று நோயின் ஊற்றுக் கண் எங்கிருக்கிறது என்றே தெரிகிறது - அவர் கூறுகிறார், "தீவிரவாதத்தின் ஊற்றுக் கண், மத்திய கிழக்கின் இழுத்துக் கொண்டே போகும் நெருக்கடியில் இருக்கிறது. லண்டன் குண்டுவெடிப்புகள் மேற்கத்திய நாடுகளின் மீது தொடுக்கப்பட்ட, விரிவான தீவிரவாத யுத்தத்தின் - ஒரு பங்காக இருக்கிறது"
(The Middle East Conflict is one of the underlying causes of terror. London bombings are a part of a wider terror war being waged against the Western countries)
அடிபட்ட வேகத்தில், ஆழ்ந்த வலியில், பிளேர் உண்மையைக் கூறிவிட்டார். இந்த உண்மையைத் தான் மற்ற வல்லுநர்களும் கூறுகின்றனர்.
சிகாகோ பலகலைக் கழகத்தின் Political Science துறையின் பேராசிரியராக இருக்கும் ராபர்ட் பேப் எழுதுகிறார் - " 9/11 போல வாணவேடிக்கைகள் நிகழ்த்தாதினால் அல்கொய்தா இயக்கம் வலுவிழந்து போனது என்று அமெரிக்க அரசியல் தலைமை எண்ணுமானால், அது முற்றிலும் தவறாகும். அதுபோல மிகப்பெரிய தாக்குதல்கள் நிகழ்த்துவதை விட, சிறு சிறு தாக்குதல்கள் மூலம், மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கி, அதன் மூலம் அந்த நாடுகளை பணிய வைப்பதுவும், அதன்மூலம், அமெரிக்காவை தனிமைப்படுத்துவதும், அரபு மண்ணின் மீதான யுத்தங்களில் அதிக பொருட்செலவையும், மன உளைச்சலையும் அமெரிக்காவிற்கு ஏற்படுத்துவதும் தான் அவர்களது திட்டம். "
ஆனால், அமெரிக்க அதிபர் புஷ் இதை உணராமல், ஏதோ அல்கொய்தா இயக்கம் பலவீனப்பட்டு சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபடுகிறது என்று பேசி வருவது உண்மையை மட்டும் மறைப்பது ஆகாது - பிரச்சினையின் மையத்தையே அவர் இன்னும் காண மறுக்கிறார் என்பதாகும். (புஷ்ஷின் புத்திசாலித்தனமும், IQவும் இப்போதெல்லாம் உலகப் பிரசித்தி பெற்றதாகி வருகிறது. நாளை முட்டாள் என்று யாரையாவது சொல்ல வேண்டுமானால், என்னடா சுத்தா புஷ்ஷா இருக்கியே என்றே சொல்லலாம்.)
தாக்குதல் நடத்தும் strategic planningஐ மாற்றிக் கொண்டார்கள் சரி. ஆனால் அவர்களுக்கு எங்கிருந்து தாக்குதல் நடத்துவதற்கு தொடர்ந்து ஆட்கள் கிடைக்கிறார்கள்? அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்க சிறைகளில் படும் கொடுமைகளை எல்லோரும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கத் தானே செய்கிறார்கள் - பின்னே எப்படி இவர்களால் தொடர்ந்து, இப்படிபட்ட motivated உறுப்பினர்களைப் பெற முடிகிறது? இங்கு தான் பிளேர் கூறிய கருத்துகள் வலுப்பெறுகிறது - பிரச்னையின் அடியாழம் - மத்திய கிழக்கு நெருக்கடி. இது ஒரு பொதுப்படையான கருத்தாகவே இருந்தாலும், கொஞ்சம் உள்நோக்கிப் பார்த்தால், இதில் இருக்கும் உண்மை தெளிவாகப் புரியும்.
முதன் முதலாக - ஒரு மேலை நாட்டு அரசியல் தலைமை - மத்திய கிழக்கின் நெருக்கடியைத் தீர்க்காது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறது. மத்திய கிழக்குப் பிரச்னை என்பது நிலப்பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது உலகினர் அறிந்தது. அதாவது பிளேர் மறைமுகமாக, கூற விழைவது - இந்தத் தீவிரவாதம் எழுந்தது ஒரு இனத்தின் நிலப்பிரச்னை தானே தவிர, மதப் பிரச்னை அல்ல என்பதைத் தான். முதன்முதலாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று குறிபிடுவதை விட்டு விட்டு, நிலத்தின் மீதான, உரிமை கோரும்போராட்டத்தினால் விளைந்த தீவிரவாதம் என்பதை ஆமோதித்துள்ளார்.
ராப்ர்ட் பேப் தனது கட்டுரையில் மேலும் கூறுகிறார் " அல்கொய்தா இயக்கம் தனது இயக்கத்தினரை அமெரிக்க நட்பு நாடுகளிலிருந்தே பெறுகிறது - அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து அல்ல. துருக்கி, எகிப்து, பாக்கிஸ்தான், இந்தோநேஷியா, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து தான், இந்த இயக்கத்தினருக்கு தொடர்ந்த்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனரே தவிர, மற்ற எதிரி நாடுகளிடமிருந்து அல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்று அவர் குறிப்பிடுபவை - இரான், லிபியா, சூடான். இந்த நாடுகளிலிருந்து ஏன் பெருமளவில் இஸ்லாமியர்கள் அல்கொய்தா இயக்கத்தில் இணையவில்லை? இங்குள்ள இஸ்லாமியர்கள் பக்தியில் குறைந்தவர்களா? இல்லை. அல்கொய்தாவினால், இங்குள்ள இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. இந்த மண்ணில் இருப்பவர்கள் அராபியர்காள் அல்ல என்பது மட்டுமல்ல, இங்கெல்லாம் அமெரிக்கா ராணுவம் நிலை பெற்றிருக்கவில்லை.
ஆம், அல்கொய்தா இஸ்லாத்தை முன்வைத்து தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக மண்ணை மீட்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதாவது, எங்கெங்கு, அமெரிக்கா ராணுவம் இறங்குகிறதோ, அங்கெல்லாம், இளைஞர்களை இந்த இயக்கம் எளிதாக ஈர்க்கிறது. இதுவே சவுதியிலிருந்து, ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து, பெரும் இளைஞர் பட்டாளாம் இந்த இயக்கத்தில் சேருவதற்குக் காரணம்."
ஆக, அல்கொய்தாவின் போராட்டம், நிலமீட்சி போராட்டமே அன்றி, மத காப்பு போராட்டம் அல்ல. அவர்களுடைய தாக்குதல்களை எல்லாம் தொடர்ந்து நோக்கி வந்தால், ஒரு உண்மை புலப்படும்: அரபு மண்ணில் நிற்கும் ராணுவத்தை அனுப்பிய நாடுகள் மீது தான் அது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா,ஸ்பெய்ன், லண்டன். அடுத்தது? ஆரூடம் கூறுபவர்கள் குறிப்பிடும் நாடுகள் - இத்தாலி அல்லது டென்மார்க். ஏன் ஈராக்கிற்கு படை அனுப்பியதால்.
அல்கொய்தாவின் அடிப்படையே நீலமீட்சி எனப்படும் பொழுது - எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிப்பது பாலஸ்தீனியப் பிரச்னை. அடுத்து, அமெரிக்க படைகள் நிலைகொண்டிருக்கும் சவுதி, குவைத், இராக், ஆஃப்கானிஸ்தான் இங்கிருந்தெல்லாம் படைகள் விலகிக் கொள்வது.
இவைகள் தான் அல்கொய்தாவின் போராட்டத்தை நிலைபெற வைத்துக் கொண்டிருக்கும் ஆயுதங்கள். முதலில் இது தான் பிரச்னை என்பதே அமெரிக்காவிற்குப் புரியவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக ரைஸ் என்ற பெண்மணியை அனுப்பி வைத்து, அரபு நாடுகளில் ஜனநாயகம் மலர வேண்டும் என்ற தேவையற்ற விவாதத்தைக் கிளப்பி விட்டு விட்டுப் போயிருக்கிறார். அதாவது, ஒரு பிரச்னையை மறைக்க, மற்றொரு பிரச்னையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்திற்காக பின்லேடன் போராடுவது போலவும், அந்த ஜனநாயகம் வந்து விட்டால், தீவிரவாதத்தை விட்டுவிட்டு, தேர்தலில் போட்டியிட வெளியில் வந்து விடுவான் போலவும், அமெரிக்கா நம்புகிறது.
பிரச்னையின் ஆதாரத்தை விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்து குட்டையைக் குழப்புவதென்ற முடிவிலேயே இயங்குகிறது. அப்படியென்றால், இந்தப் பிரச்னைக்கு முடிவு தான் என்ன? மத்திய கிழக்கு நெருக்கடிக்கு ஒரு தீர்வு.
தீவிரவாதத்திற்கு இது தான் தீர்வு என்று தெரியுமா? எதிரெதிர் அணியினருக்குத் தெரிகிறது. அதாவது இஸ்ரேலுக்கும், நிலமீட்சித் தீவிரவாதிகளுக்கும். இப்பொழுது தான் மூன்றாவதாக, ஒரு மேலை நாட்டு தலைமை உணர்ந்திருக்கிறது - மத்தியக் கிழக்குத் தீர்வு வெறுமனே இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை மட்டுமல்ல, அது, தீவிரவாதத்தின் தீர்வாகவும் இருக்கப் போகிறது என்று.
ஆனால், தீர்வு கிடைக்குமா?
அத்தனை எளிதாகக் கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏன்? இஸ்ரேல் இந்த தீர்வை ஒரு போதும் விரும்பாது. முதலில், இதை நீலமீட்சிக்கான தீவிரவாதம் என்று கூட அது ஒப்புக் கொள்ளாது. இதற்கு ஆதாரம் - டோனி பிளேரின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "அமெரிக்கா, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் நடத்தப் பெற்றது போன்ற, ஒரு விரிவான தளத்தில், தீவிரவாதப் போரை லண்டனில் இயங்கும் தீவிர வாதிகள் கடந்த வாரம் நிகழ்திதியுள்ளனர் - மேல நாட்டு கலாச்சாரத்திற்கு எதிராக. " இவ்வாறு கூறியவர் யார் தெரியுமா? இஸ்ரேலின் துணை அதிபர் - எஹுத் ஒல்மெர்ட். (the terrorist operating in London last week were doing it as a part of a comprehensive terrorist war against the Western civilisation similar to what they have done in America, similar to what they've done in Spain, similar to what they've done in Spain)
இங்கு டோனி பிளேர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும், எஹுத் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. பிளேர் கூறும் பொழுது Western Country என்கிறார். மற்றவரோ Western Civilisation என்கிறார். மேலை நாட்டு கலாச்சாரம் என்று நிலைபெறச் செய்ய, யூதர்களின் பிரதிநிதி மெனக்கெடுகிறார் - ஏனென்றால், ஒரு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று வாதிடுவதன் மூலம், இந்த தீவிரவாதிகள் கலாச்சாரத்தின் அடிப்படையில் - கிறித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைக் கலாச்சாரத்தை எதிர்க்கும், இஸ்லாமிய கலாச்சாரத்தை தத்துவார்த்தமாக கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்று நிறுவ முடியும். அதை விட்டு விட்டு, நிலப்பரப்பைக் குறிக்கும், country என்ற பதத்தை பயன்படுத்தினால், இந்த தீவிரவாதத்தை நீல மீட்சிக்கான தீவிரவாதம் என்று அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு அங்கீகரித்தால், அது தனக்குத் தான் தலைவலி என்று தெரியும். அதனால், மறந்தும் கூட, இதை நீலமீட்சிக்கான தீவிராவாதம் என்று சொல்லிவிடவோ, அப்படி ஒரு கருத்து தோன்றி விடவோ, விடக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகக் கவனமாக காய்களை நகர்த்தும்.
ஆமாம், இஸ்ரேல் மட்டும் தான் இதை இஸ்லாமிய மதத்தோடு சம்பந்தப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்க நண்பர்கள் உண்டு. அவர்களைக் கொண்டு, பத்திரிக்கை நண்பர்களைக் கொண்டு, இஸ்ரேல் மிகத் தீவிரமாக இந்த நீலமீட்சிக்கான தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரமாகக் காட்டுவதற்கு தன்னால் முடிந்த வரையிலும் போராடும். அழுகுணி ஆட்டம் ஆடும். ஏனென்றால், தீவிரவாதத்தின் உண்மை ஊற்றுக் கண்ணை அடையாளம் கண்டு, அது தான் பிரச்னைக்குத் தீர்வு என்று அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், அன்று தன்னுடைய இருப்பிற்கே ஆபத்து என்று அதற்குப் புரியும்.
உண்மைகளை மூடி மறைத்து, மாயையைகளை உருவாக்கி, அதன் மூலம் தொடர்ந்து மேலை நாட்டு அரசுகளை தவறான பாதையில் செலுத்துவதை இஸ்ரேல் தொடர்ந்து செய்யும். அதை உலகம் தீவிரவாதம் என்று இதுவரையிலும் நம்பியதில்லை. ஆனால், இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் பொழுது, உண்மைகளை உலக மக்கள் புரிந்து கொள்ளும் பொழுது, உண்மையான தீவிரவாதி இஸ்ரேல் தானே தவிர, இஸ்லாம் அல்ல என்பதும் புரிந்து விடும்.
உண்மையின் முதற்கீற்றுகள் இப்பொழுது தான் மேலை நாடுகளின் கரைகளைத் தொடத் துவங்கியிருக்கிற்றது.
6 Comments:
நன்றி சகோதரரே... மிக அழகான விளக்கம். வாழ்த்துக்கள்.
நன்றி.
இன்னமும் இது போன்ற பல செய்திகளும் வரும்.
தொடர்ந்து பாருங்கள்
அன்புடன்,
பீர் முகமது ஷாஜஹான்
//ஏனென்றால், தீவிரவாதத்தின் உண்மை ஊற்றுக் கண்ணை அடையாளம் கண்டு, அது தான் பிரச்னைக்குத் தீர்வு என்று அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், அன்று தன்னுடைய இருப்பிற்கே ஆபத்து என்று அதற்குப் புரியும்.//
உண்மை!
பிரச்னை என்னவென்று புரியாதிருப்பது அல்லது புரியாததுப் போலிருப்பது தான் இங்கு பிரச்னையே!
நல்ல பதிவு! ஆனால்
ஒரு முஸ்லிம் நீங்கள் பதிவதால் நிறைய 'நடு'நிலையாளர்கள் 'மெய்ப்பொருல் காண விழைய மாட்டார்கள்.
'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் - அப்பொருள்
யார் யார் பகன்றது என்பதறிவதே ' இன்றுள்ள நிலை.
எனினும் சில பல நிஜமான நடுநிலையாளர்களும் உண்டு தான். நன்றி!
//அதாவது, எங்கெங்கு, அமெரிக்கா ராணுவம் இறங்குகிறதோ, அங்கெல்லாம், இளைஞர்களை இந்த இயக்கம் எளிதாக ஈர்க்கிறது. இதுவே சவுதியிலிருந்து, ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து, பெரும் இளைஞர் பட்டாளாம் இந்த இயக்கத்தில் சேருவதற்குக் காரணம்.//
சரிதானென தோன்றுகின்றது
நன்றி ராஜா.
ஒரு முஸ்லிம் நீங்கள் எழுதுவதால் என்ற கேள்விக்கு பதில் சொல்ல இயலாது.
என்னுடைய சிந்தனைகள் ஓரளவிற்கு பெரியார், இடது சாரிய சிந்தனைகளைச் சார்ந்தது. நான் வாசிக்கும் புத்தகங்களும், பழகும் நண்பர்களும் அத்தகைய சிந்தனைகளை உடையவர்களே. நான் இறுதியாக வாசித்த புத்தகம் - சுபவீ எழுதிய பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் (தமிழ் முழக்கம் வெளியீடு.)
மேலும் நான் எழுதும் பொழுது நடுநிலையாக எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. ஏனென்றால் நடுநிலை என்று ஒன்று கிடையாது. இஸ்லாத்திற்கு ஆதரவான பார்வையே என்னுடையது.
ஆனால் அவ்வாறு எழுதும் போதும் விமர்சிக்கும் போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனமாக இருக்கிறேன்.
இஸ்லாத்திலும் பிரச்னைகள் உண்டு. ஆனால் அவற்றை இஸ்லாத்தின் உள்ளாக விவாதித்து தீர்த்துக் கொள்ள இஸ்லாமியர்களை அனுமதிக்க வேண்டுமேயன்றி, அமெரிக்கா தன் படைகளை அனுப்பி தீர்த்து வைக்க முயல்வதை - முஸ்லிம்கள் மட்டுமல்ல, எந்த ஒரு இனமும் - சுயமரியாதை உள்ள இனமும் அனுமதிக்காது.
இன்று இஸ்லாமியர்களிடையே இருவிதமான நெருப்பு உண்டு. ஒன்று அமெரிக்க ராணுவம் செய்யும் அட்டகாசம். மற்றொன்று தங்கள் பரம்பரை ஆட்சிகளைக் காப்பாற்றிக் கொள்ள அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து அவர்களுடன் தீவிரவாதி வேட்டையாடுதல் என்ற ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் எண்ணெய் வளமிகு நாடுகள்.
ஒரு பக்கம் அமெரிக்கா விலகி கொள்ள வேண்டுமென்றால் மறுபக்கம் மன்னர்கள் பரவலான அதிகார பகிர்வுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
என்றாலும் வருத்தமாகத் தானிருக்கிறது - இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடமும் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் தங்களைத் தாங்களே வெடித்துக் கொண்டு சிதறிப் போவதை எண்ணும் பொழுது.
'நாளை வளர்ந்த பின்பு ஏதோ ஒரு சக்தியால் என் மகனும் இப்படி செய்து விடுவானோ' என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் - அன்றிரவு தூக்கம் போய்விடுகிறது. என் மகனுடன் தொலைபேசியில் பேசும் பொழுதெல்லாம் கண்டிப்பாக அவனது நண்பர்களைப் பற்றியும் விசாரிக்கிறேன். புதிய நண்பர்கள் உண்டா என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறேன். இத்தனைக்கும் அவன் டீன்ஏஜில் காலடி எடுத்து வைத்தே ஒரு வருடம் தான் ஆகிறது.
நாளை திடீரென்று கெடுபிடிகளை ஆரம்பிக்காமல் முதலில் இருந்தே செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்.
தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர மிதவாதிகள் உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வெளியே இருக்கும் மாற்று மத நண்பர்கள் அமைதி காத்தால் அது மிதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால், மாற்று மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து இஸ்லாத்தை இழிவு செய்யும் போக்கைக் கடைபிடிக்கும் பொழுது அது மிதவாதிகளைக் கூட தீவிரவாதிகளாக மாற்றும் அபாய நிலை உண்டு.
நேசகுமார், புலிப்பாண்டி போன்றவர்கள் பதிவை வாசித்த பின் தான் எனக்குத் தோன்றியது - குரானை மொழி புரியாமல் அரபி மொழியில் ஒரு காலத்தில் ஓதி முடித்தது போதாது. நல்ல உரையுடன் கூடிய மொழி பெயர்ப்புடன் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று. இன்று அறை முழுக்க, குரானும், அஹ்தீதும், நபிகளவர்களின் வாழ்க்கை வரலாறு என இஸ்லாமிய புத்தகங்களும் நிறைந்து வழிகின்றன. இன்னும் வாங்குவேன். முன்னே குழப்பமாகத் தோன்றிய பல விஷயங்கள் இப்பொழுது தெளிவாகப் புரிகிறது. முன்னை விட இப்போ நான் ஒரு knowledgeable Muslim என்றே என்னைக் கூறிக் கொள்வேன். காரணம் - இந்து மத அடிப்படைவாதிகள் இஸ்லாத்தின் மீது தரம் குறைந்த வார்த்தைகளால் கூறும் பழிச்சொல்!!!
இஸ்லாமிய நம்பிக்கைகளை இஸ்லாமிய நெஞ்சங்களிலிருந்து வெளியேற்ற அவர்களது மரணத்தால் கூட இயலாது. ஆக இந்து அடிப்படைவாதிகள் அவர்களது தாக்குதலை நிறுத்திக் கொண்டால், அதுவே மிதவாதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு.
இல்லையென்றால் அவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தான் எதிர்நோக்க வேண்டியதிருக்கும்.
நன்றி.
நன்றி குழலி.
அந்த வார்த்தைகளைக் கூறியது அமெரிக்காவிலுள்ள ஒரு பேராசிரியர் தான். அமெரிக்கா தன் எதிரி நாடுகளாகக் கருதும் இரான், லிபியா, சூடான் போன்ற நாட்டு இளைஞர்கள் ஒருவர் கூட இது வரையிலும் அல்காய்தா இயக்கதிலிருந்து கைது செய்யப் படவில்லை.
எல்லாம் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருந்து தான் இளைஞர்கள் அவர்களிடத்தில் போகிறார்கள். இதை அமெரிக்கா உணராமல் இருந்திருக்குமா? நிச்சயம் உணர்ந்திருக்கும். என்றாலும் இந்த நாடுகளின் எண்ணெய் வளமே இத்தகைய risk ஐ எடுக்க வைக்கின்றது. பின்னர் அதைப்பற்றி புலம்புவது கூடாது.
இது தான் அமெரிக்காவின் கோழைத்தனம். யுத்தம் புரிவதற்கென சிப்பாய்களை அனுப்பி விட்டு பின்னர் அவர்கள் இறப்பதைக் கண்டு புலம்புவது.
எல்லா வீரர்களுமே கார்கிலில் செத்து விழுந்த துணிச்சல்மிக்க இந்திய வீரர்களாகிவிடுவரா, என்ன?
Post a Comment
<< Home