BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Friday, November 25, 2005

பிராமணரல்லாதோரும் - பிராமணர்களும் - சில பதில்கள்

கருணாநிதியின் கூற்று......

கருணாநிதி தவறாக எதுவும் கூறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுகாசினி பேசிய அநாகரீகப் பேச்சை முதலிலே கண்டித்திருக்க வேண்டும்.

சுகாசினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஞாநி சொல்கிறார் - "உங்கள் தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா என பாருங்கள் - இல்லை அல்லவா? பின் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டியது தானே?" என்கிறார்.

ஒரு LKG குழந்தை கூட தன் வாதங்களை இந்தக் காலத்தில் சற்று திறம்பட வைக்கும்.

அது சரி, ஞாநி கூறிய கூற்றின் உட்பொருள் என்ன?

ஒரு காலத்தில் - உங்களையெல்லாம் கொம்பு முளைத்த அரக்கர்களாகத் தான் சித்தரித்து வைத்திருந்தோம். ஆழ்மனதில் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த ஆபாசத்தை அறிந்தோ - அறியாமலோ பேசிவிட்டார் என்று ஞாநி ஒப்புக் கொள்கிறார்.

இதைத் தான் கலைஞர் சொன்னார் -

இந்த தர்க்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற பாதையில் திரும்புகிறது என்ற தனது கருத்தை வெளியிட்டார். இதில் என்ன தவறு கண்டீர்கள்? ஒரு வலைப்பூவைப் போட்டுக் கொண்டு கருத்து சொல்லவும் எழுதவும் உங்களுக்கும், நமக்கும் உரிமை இருக்கும் பொழுது அவருக்கும் உரிமை இருக்குமல்லவா?

அதற்காக கலைஞர் மீது வரிந்து கொண்டு பாய்வது தவறு.

பிராமண எதிர்ப்பு அரசியல் எடுபடாது - அப்படி எடுத்தால் தோற்றுப் போவீர்கள் என்கிறீர்கள். ஒருவேளை அவர் பிஜேபி போடும் தூண்டில்களுக்கு இசைந்திருந்தால் - அவருடைய பிராமண ஆதரவு அரசியலை ஆதரித்து இருப்பீர்கள் அல்லது மௌனமாக இருந்திருப்பீர்கள். அரசியல் களத்தில் ஓட்டுகளுக்காக மட்டுமே இடம் மாறிக் கொள்வதைப் பற்றி இன்று மக்கள் எந்தக் கவலையும் படவில்லை. அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விட, எங்கிருந்தாலும் எந்த அளவிற்கு தங்கள் இனத்திற்கு பயன் தரும் வகையில் கட்சிகள் இயங்குகின்றன என்று தான் மக்கள் பார்ப்பார்கள்.

மருத்துவர் ராமதாசின் கட்சி சாதியக் கட்சி.

இருக்கட்டும்.

அவர் அவர் சார்ந்த சாதிக்காகப் பாடுபட்டு, வெற்றியும் பெற்று, இன்று தன் தளங்களை விரிவுபடுத்தி மற்ற மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவில் இயங்குகிறார். ஆனால், பிஜேபி என்ன செய்தது? பிராமணர் கட்சி தானே? நாட்டில் நிலவி வந்த அமைதியான சூழலை குழி தோண்டி புதைத்தது. எங்கும் கொலைவெறித் தாண்டவமாடியது. அது மட்டும் சாதிக் கட்சி இல்லையா? பால் தாக்கரே சாதிக்கட்சி நடத்த வில்லையா? இவர்கள் எல்லோரும் புனிதத்தில் தங்கள் கட்சியை நீராட்டுகிறார்களா? ஆட்சியைப் பிடிக்கத்தானே இவர்கள் அரசியல் கட்சி நடத்துகிறார்கள்? - சாதியத்தை முன் வைத்து.?

பாமக - தங்கள் இலக்கில் தேசிய சாதிக்கட்சிகளை விட தெளிவாகவே இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதை விட, அதிக பட்ச சலுகைகளைப் பெறுவதிலே தான் அவர்கள் இலக்கு இருக்கிறது. ஒரு சமூகம் தான் அடைய வேண்டிய பயன்களைப் பெற போராடுவதில் தவறில்லை.

பாமக கட்சி அரசை நோக்கித் தான் போராட்டத்தைத் துவங்கியது. பிராமணர்களை நோக்கி அல்ல. பிராமணர்கள் வெறும் விமர்சகர்களாக இருந்து கொண்டு, அங்கும் இங்கும் பகை தூண்டி குளிர் காயும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமற்ற சூழ்நிலை நிலவி வந்த பொழுது தான், ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.

Blood is thicker than water என்பார்கள். அதன் வாழும் உதாரணம் - ஜெ. மீண்டும் பிராமணர்கள் துளிர்விட ஆரம்பித்தார்கள். அவர்கள் துளிர்விடும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் துளிர் விடத்தான் செய்கின்றன. என்றாலும் அவற்றைக் காட்டி போராட வேண்டிய அவசியமில்லாது போய் விட்டது - காரணம் - இங்கு ஒவ்வொருவரும் தங்கள் இருப்பை - பிற சாதிகளின் இருப்புடன் ஒப்பீடு செய்து, அதை சமன் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். பிராமண எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது - ஊதிவிட தேவையேற்படாமல்.

இந்த சாதியக் கட்சிகள் தங்கள் பலத்தை மற்றவர்களுடன் சமன் செய்யும் முயற்சியில் இறங்கிய பொழுது நிகழ்ந்தவை தான் வன்னிய-தலித் மோதல்கள் - வடக்கே. முக்குலத்தோர் - தலித் மோதல்கள் தெற்கே. கிட்டத்தட்ட இப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் பலத்தின் - வலிமையின் தன்மையை உணர்ந்த பின்பு - இப்பொழுது அவற்றைக் கொண்டு மேலும் தங்கள் மக்களுக்கு என்ன பயன்கள் கிட்டச் செய்யலாம் என்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்ற ஆயுதத்தை விட தங்களுக்கு என்ன பயன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற பேரத்தில் தான் கவனமிருக்கிறது.

இதனாலேயே அவர்கள் கூட்டணி மாறிக் கொள்ள கூட தயங்கவில்லை. ஒரு தனிப்பட்ட தலைவர் தான் ஒரு கொள்கையாளன் என்ற பட்டம் பெறுவதை விட, தான் சார்ந்த மக்கள் பயன் பெற வழி வகை என்ன என ஆரம்பித்து அதை செயல்படுத்துவது தான் முக்கியம்.

இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சமீப காலங்களில், சிறந்த தலைவராக பாராட்ட வேண்டுமென்றால் - அது ராமதாசாகத்தான் இருக்கவேண்டும். பாருங்கள் - இஸ்லாமியர்கள் கூட இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டு ஜெ. விடம் பேசுகிறார்கள் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் - அடுத்த தேர்தலில் உங்களுக்கே ஓட்டு போடுகிறோம் என்று. காலம் தாழ்ந்த அரசியல் விழிப்பு என்றாலும், இப்பொழுதாவது வந்ததே என்பது தான் முக்கியம். அது போல திருமா கூட ஜெ.வின் பக்கம் போக வாய்ப்பிருக்கிறது - அவர் சார்ந்த மக்களுக்கு, சிறந்த பயன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்.

இப்படியான இயங்கு தளத்தில் - பிராமண எதிர்ப்பை எல்லோரும் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஈனஸ்வரத்தில் முழங்கும் பிராமணர்களை விட மற்றவை அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் ஜெ., பிஜேபி போன்றவர்களின் வரவு, சங்கராச்சாரியார் போன்ற கறை படிந்த துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட - அரசியல் நிர்ணயச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் - இவை மீண்டும் மக்களை விழிப்படையச் செய்து விட்டது.

சங்கராச்சரியாருக்கு ஆதரவாக மக்கள் எங்குமே கொதித்து எழவில்லை என்பதே பிராமண எதிர்ப்பு எத்தகைய வலுவான நிலையிலிருக்கிறது என்பதை உணர்த்தும்.

1950 களில் எடுபட்டது இன்றும் எடுபடும். ஏனென்றால் இந்தப் போராட்டம் - வெறும் 1950களில் தொடங்கப் படவில்லை... அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது.

என்று பலகோடி மக்களை இழிவுபடுத்தும் வகையாக அவர்கள் பேசும் மொழியை இழித்தும் பழித்தும் பேசினார்களோ - பேசுகிறார்களோ - பேசுவார்களோ - அதுவரையிலும் பிராமண எதிர்ப்பு என்பதே கனன்று எரியத்தான் செய்யும்.

இந்த எதிர்ப்பை, தர்க்கத்தை - ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் எதிர்ப்பாக மட்டுமல்ல - தங்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் களைந்தெடுக்கவும், பகுத்தறிவு வழியில் மேலும் விரைந்து செல்லவும், பெண்களின் உண்மையான விடுதலைக்காக போராடுவதற்காகவும் இந்த எதிர்ப்பு உணர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சங்கராச்சாரியார் இந்த பிராமண எதிர்ப்பை ஊதிப் பெரிதாக்கி கொழுந்து விட்டெரியச் செய்தார் என்றால், சுகாசினி அதில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இன்னும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முன்னே செல்லுமே தவிர இதில் பின்னடைவு வருவதற்கு சாத்தியதை இல்லை.

என்றாலும், இந்தப் போராட்டங்கள் - நாகரீகமாக நடத்தப்பட வேண்டும். இதில் பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தும் தலைவர்கள் வெற்றி பெற்றால், தமிழ் உணர்வாளர்கள் எதிர்பார்க்கும் - ஆலயங்களில் தமிழ் உட்பட பல எதிர்பார்ப்புகளும் எளிதாக நிறைவேறிவிடும்.

Wednesday, November 23, 2005

அமெரிகாவின் கடைவாயில் ரத்தம் ஒழுகும் ஜனநாயகம்...

கசிந்து வந்த அந்த செய்தியைப் பற்றி அதில் சம்பந்தப்பட்ட யாருமே கருத்து சொல்லவில்லை.

வெள்ளை மாளிகைக்கு அது ஒவ்வாத கருத்து. அந்தச் செய்தியைப் பற்றி கருத்து சொல்லி, அதற்கு ஒரு மரியாதை உண்டாக்க விரும்பவில்லை என்று சொல்லிக் கொள்கிறது.

டௌனிங் தெருவோ என்றைக்குமே கசிந்து வரும் செய்திகளுக்குப் பதில் சொல்வதில்லை.

குறி வைக்கப்பட்ட அல்-ஜஸீரா தொலைக்காட்சி செய்தி நிறுவனமோ உடனடியாக கருத்து ஏதும் சொல்லவிரும்பவில்லை.

எந்த செய்தி அது?

ஜார்ஜ் புஷ் - பிளேரிடம் விவாதிக்கிறார் - அல்ஜஸீராவின் தோஹா, கத்தார் அலுவலகத்தின் மீது குண்டு வீசி தகர்க்க வேண்டுமென்று வாதிடுகிறார்.

ஜனநாயகத்தையே கண்டுபிடித்தவர்கள் என குதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நம்பர்-1 தான் இப்படி பேசுகிறது. விடுதலையே எமது மூச்சு என்று குறியீடாக விடுதலை தேவி சிலையையும் (பிரான்சு நாடு கொடுத்த அன்பளிப்பு) நிறுவி வைத்திருக்கிறது.

தன் நாட்டுப் பத்திரிக்கைகளைக் கொண்டு உலகெங்கும் பிரசாரம் செய்கிறது - விற்க முயல்கிறது - தன்னிடம் இருக்கும் உயர்தர ஜனநாயகத்தை - ஏதோ கடைகளில் கிடைக்கும் பிரியாணி பொட்டலம் போல உலகெங்கும் விற்றுத்தீர்த்து விடலாம் என்ற கணிப்பு...

லண்டனில் கசிந்து அதை மறுக்கத் திராணியற்று லண்டனும் வாஷிங்டனும் மௌனம் சாதிக்க - அவர்களது முகத்திரை கிழிந்து கொண்டிருக்கிறது இந்த செய்தினால்.

இறுதியாக பிளேர் - better of the two evils - புஷ்ஷை அப்படியெல்லாம் செய்யக்கூடாது செல்லம்னு சொல்லி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு 'மக்கு'த் தலைவரை எப்படித்தான் தேர்ந்தெடுத்து தொலைத்தார்களோ இந்த அமெரிக்க மூடர்கள் தெரியவில்லை.

புஷ்ஷின் ஆங்காரம் என்ன?

அல் ஜஸீரா தொடர்ந்து பொது மக்கள் அவதியுறுவதைத் தன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தது - அதாவது உண்மையை. ஜனநாயகம் பேணும் அமெரிக்க, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளோ மக்களுக்கு எந்த பங்கமுமில்லை - தீவிரவாதிகளை மட்டும் தான் தீர்த்துக் கட்டுகிறோம் என்ற sweet nothingஐ காலை, மாலை உணவாகத் தந்து கொண்டிருந்த நேரம் அல்-ஜஸீரா உண்மைகளைப் போட்டு உடைத்து அவர்கள் எந்த உணவையும் நிம்மதியாக உண்ணாமல் செய்து விட்டது.

விளைவு? புஷ்ஷின் ரேட்டிங் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. மதிப்பிழக்கத் தொடங்கினார். ஒரு பொய் சொல்லி போரைத் தொடங்கினார். பின்னர் அதை மறைக்க வரிசையாகப் பொய்கள் - கடைசியாக தாங்கள் தூக்கிப் பிடித்த ஜனநாயக மரபுகளையே மீறி செயல்பட துணிந்தார்.

இப்பொழுது மக்கள் கேட்கும் கேள்வி - அல்ஜஸீரா தலைமையகம் தாக்கப்படவில்லை. சரிதான்.

ஆனால் அல்ஜஸீராவின் பாக்தாத் அலுவலகத்தின் மீது குண்டு விழுந்தது. சில பத்திரிக்கையாளார்கள் இறந்தனர். அப்பொழுது, அதை 'No Collateral Damages' என சொல்லி - ஏதோ அறியா பிழை என எல்லோரையும் நம்ப வைத்தார்கள். இராக்கின் யுத்த களத்தில் மொத்தம் 74 பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், உதவியாளர்கள் இறந்திருக்கின்றனர் - பணியிலிருக்கும் பொழுது.

அமெரிக்கா - இந்தியாவை Thirld World என்கிறது.

ஆனால் என்னைத் தரம்பிரிக்கச் சொன்னால்

First World -

Second World

Third World

Dirty World - USA & England.

மற்ற மூன்றிலும் யார் வேண்டுமானாலும் எந்த நிலைமையிலும் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.....

Saturday, November 19, 2005

சானியாவை விரட்டிய பத்திரிக்கை நிருபர்கள்....

குஷ்பு பிரச்சினை வந்தாலும் வந்தது -

இப்போ எல்லா பிரபலங்களையும் கருத்து சொல்லு கருத்து சொல்லு என்று விரட்டிக் கொண்டிருக்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.

கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாலும் விடுவதில்லை. கருத்து சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் பத்திரிக்கைகள் பிறரை மதிக்கும் கருத்து சுதந்திரம் இது தான்.

சானியா கேரளாவிற்கு மலபார் கோல்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு brand ambassador ஆகப் போயிடுந்தார். அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் இந்தக் கலாட்டா.

ஏற்கனவே அவர் சொல்லாத கருத்துகளை அவர் சொல்லியதாக அவர் பெயரில் எழுதி, பின்னர் விளக்கமளித்தார். எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்த பிஜேபி உடனே கொளுத்திப் போட்டது அவர் உருவத்தை.

ஆடைகள் விஷயத்தில் சானியாவை எதிர்ப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த முல்லாக்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் ஆங்காரத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். ஏதோ சானியா தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதினால், இவர்களால் ஏதும் செய்ய இயலாது பற்களை நறநறவென கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இந்நேரம் பத்வா கொடுத்து கண்காணாத இடத்திற்குத் துரத்தியிருப்பார்கள்.

இப்படி பலவகையிலும் கவனச் சிதறலுக்கு உள்ளாக்கி, அவரை தோல்வியடையச் செய்ய பல வகையிலும் மதவாதிகள் முனைப்போடு செயல்படும் பொழுது - இப்பொழுது பத்திரிக்கையாளர்களும் அந்த வரிசையில்.

சந்திப்பு தொடங்கும் பொழுதே - சானியா குறிப்பாகக் கூறிவிட்டார் - தன்னுடைய வரவிற்கு சம்பந்தமற்ற கேள்விகளைத் தவிர்க்கச் சொல்லி.
அதாவது - மலபார் கோல்ட் நிறுவனம் அதனுடைய brand ambassador - இதைத் தவிர வேறு எதுவும் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் பத்திரிக்கைகள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. தொடர்ந்து உடலுறவு கொள்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பதைப் பற்றியே கேட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர் மறுக்க - இது மலபார் பூமியாகும் - கருத்து சுதந்திரம் நிறைந்த மண். நீங்கள் கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்திருக்கிறார்கள். மௌனமும் ஒரு வகைக் கருத்தே என்ற அடிப்படை கூட விளங்காத முட்டாள்கள் - கேரளா ஏதோ கருத்து சுதந்திரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல பேசி - வற்புறுத்த - கோபமுற்ற சானியா வெளியேறிவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மற்றொருவரான - மோஹன்லால் - சூப்பர்ஸ்டார் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் - சானியாவின் பின்னாலயே ஓடியிருக்கிறார்கள் - கருத்து சொல் என்று.

எத்தகைய ஒரு வன்முறை இது. ஒருவரை வலிந்து போய் எதையாவது சொல் - நாங்கள் எழுதி சம்பாதிக்க வேண்டும் என வன்முறையில் - கருத்தியல் வன்முறையில் இறங்கிய - இந்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் உண்மை சொரூபத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஒருவரை கருத்து சொல்லி வற்புறுத்துவதே ஒரு வன்முறை தான். இதை பொது வாழ்வில் நேர்மையை எதிர்பார்க்கும் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

கருத்தடை - பெண்கள் சமாச்சாரமல்ல....

கருத்தடை - பெண்கள் சமாச்சாரமல்ல....


இந்த நவீன வாழ்க்கையில், கருத்தடை என்பது இன்றியமையாதது.

மதவாதிகள் இதை முழுமூச்சாக எதிர்த்தாலும், மக்கள் கருத்தடையின் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்.

கருத்தடையின் தேவைகள் -

ஏழை நாடுகளைப் பொறுத்தவரையிலும் - பொருளாதாரச் சிக்கல்கள் தான்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் மூலமே வாழ்க்கையை வளமாக்க முடியும் என்ற தேவைகள்.

இங்கு மதவாதிகளை மக்களே ஒதுக்கிவிட்டார்கள்.

அரசும் கருத்தடை குறித்த சட்டங்களை எளிதாக இயற்ற முடிகிறது. குறிப்பாக கருக்கலைப்பு சட்டங்கள்

மேலைநாட்டிலோ - இதற்கு நேர் எதிர்.

மக்கள் தொகை இல்லாததினால், பிற நாட்டு மக்கள் வளத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம். அதைத் தவிர்க்க மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம். அரசுகள் அதிக சலுகைகளை அறிவிக்கின்றனர்.

மக்களோ அதிக குழந்தைகளைத் தொல்லைகளாக நினைக்கின்றனர். ஏனென்றால் அவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர, அதிக உழைப்பு தேவைப்படுகிறது. என்ன தான் அரசுகள் பொருளாதார உதவிகள் செய்தாலும் - அவர்கள் அதிக பொறுப்புகளை சுமக்க தயங்குகிறார்கள்.

அதனால் அவர்களுக்கும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு பிரச்சினை எழத்தான் செய்கின்றன. இது மேல் நாட்டில் ஒரு பொதுவான சமூகப் பிரச்சினையாக இருந்தாலும், பெண்கள் இதை தங்கள் உரிமைகளுடன் முடிச்சுப் போட்டும் பார்க்கிறார்கள்.

கருத்தடை சாதனங்களும், கருக்கலைப்பும் இல்லையென்றால், அங்கும் கூட பெண்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பம் போல நண்பர்களுடனோ, அல்லது அலுவலக சக ஊழியர்களுடனோ, அல்லது one night standன்னு சொல்லப்படும் முற்றிலும் அந்நியன் ஒருவனுடனோ - உறவு கொள்ளும் தங்கள் தனி மனித விருப்பங்கள் பாதிக்கப்படும் என்றே அஞ்சுகின்றனர்.

கிறித்துவ தேவாலயங்களோ, கருக்கலைப்பை முற்றிலுமாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், பெண்கள் தங்கள் உரிமைகளை அடைவதில், தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்துவதில் சற்றும் கூட மதவாதிகளுக்கு விருப்பமில்லை.

இஸ்லாத்திலும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதிலே மதவாதிகள் தீவிரமாக இருக்கின்றனர். மக்கள் தொகை மிகுந்த இஸ்லாமிய சமூகங்கள் இப்பொழுது கருத்தடை சாதனங்களை ஏற்றுக் கொண்டு விட்டது. (ஆனாலும் கருக்கலைப்பு என்பது இன்னமும் ஏற்கப்படவில்லை)

ஆக, உலகம் முழுமைக்கும் இது ஒரு பிரச்சினையாகவே ஆகிவிட்டது.

கருத்தடை சாதனங்கள் இருவருக்குமே தயாரிக்கப்படுகின்றனவென்றாலும் - வேண்டாத கர்ப்பம் என்பது பொதுவாக பெண்களின் பிரச்சினையாக்கப்பட்டு விடுகிறது. அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே அதிக சிரத்தை எடுக்க வேண்டியதாகிறது. அரசும், பெண்களைக் குறி வைத்துத் தான் தன் பிரச்சார யுத்திகளை முன் வைக்கிறதேயன்றி, ஆண்களைக் குறி வைப்பதில்லை. ஒருவேளை, பிறக்கும் வழியையே அடைத்துவிட்டால், பிறகென்ன கவலை என்ற தாந்தோன்றித்தனமான முடிவாகக் கூட இருக்கலாம்.

அரசு எந்திரத்தின் மூலம் பெண்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஆண்களால் தானே எடுக்கப்படுகிறது?

இவர்கள் அரசு எந்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மிக எளிதாக அத்தனை சுமைகளையும் பெண்கள் மீது இறக்கி வைத்து விடுகிறார்கள்.

குடும்பம் என்ற நிறுவனத்தை நடத்திச் செல்வதுவும், அதன் (லாப)நட்டங்கள் அனைத்திற்கும் பொறுப்பாக்கப்படுவதுவும் பெண்கள் தானென்பதனால், அதிகக் குழந்தைகளைத் தவிர்க்கும் இந்தப் பொறுப்பையும் சுமக்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இது தங்கள் உரிமைப் பறிப்பாகத் தெரிவதில்லை.

உதாரணமாக, ஒரு பெண் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள் - தன் கணவனுடன். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பிரிய வேண்டி வருகிறது. பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் வளர்ப்பு உரிமையையும் இழக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? மறுமணம் செய்துகொள்ள (பெண்ணின் வயதையொத்து) ஆண்கள் தயாரானாலும் - கருத்தரிக்க இயலாத பெண்களை எந்த ஆண்கள் தங்கள் வம்சவிருத்திக்கான வழியாகப் பார்ப்பார்கள்? பெண்களுக்கு நிகழ்த்தப்படும் எத்தகைய கொடுமை இது? அவர்களின் வாழ்வின் உரிமையை பறிப்பதாகாதா? இத்தகைய கருத்தடை முறைகள்! பெண்களோ, ஆண்களோ நிரந்தரமான கருத்தடை என்பது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். சமீபத்தில் கும்பகோண தீவிபத்தில் தங்கள் குழந்தைகளை பறி கொடுத்த தாய்மார்களுக்கு மாற்று அறுவைசிகிச்சை கொடுத்ததிலிருந்தே தெரிகிறதே - பெண்களுக்கு எத்தனை பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது - இந்த கருத்தடை முறைகள்? (நூறு சதவிகித மாற்று வழியாக இதைக் காணமுடியாது என்பது மருத்துவர்களின் கூற்று.)

ஆண்களுக்குக் கவலையில்லை - அப்படியே போய் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நொடிப்பொழுதில் தொடங்கி விடலாம்.

இன்று நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் போதிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அரசு அதை தனக்கு வசதியாகக் கருதி, பொருளாதார நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு, பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மறைத்து, பிரச்சார யுத்திகளால் தொடர்ந்து பெண்களைத் தாக்கி தன் நோக்கை, இலக்கை அடையத் துடிக்கிறது.

இந்த சூழ்நிலையில், பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ நிரந்தர கருத்தடை செய்வதை மதவாதிகள் எதிர்ப்பது கூட சரியெனவே படுகிறது - அவர்கள் அறிந்தோ, அறியாமாலோ, செய்யக் கூடிய சரியான காரியமாக இருக்கிறது.

அரசு கவனம் செலுத்த வேண்டியது - நிரந்தர கருத்தடை முறைகளையும் அவற்றின் பிரச்சாரத்தையும் கைவிட்டுவிட்டு - தற்காலிக முறைகள், பின்விளைவுகளை ஏற்படுத்தாத மருந்து, மாத்திரை மற்றும் அவற்றிற்கான ஆராய்ச்சிகள், ஆணுறைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தி பிரச்சார முறைகளை அமைக்க வேண்டும்.

கருக்கலைப்பை முற்றிலுமாக பாதுகாப்பானதாக்கி, fly by night operatorகளைத் தடுத்து, முறைப்படுத்த வேண்டும். அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை வடிவமைக்க வேண்டும்.

கருத்தடையின் முழு பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்தும் ஆண்களின் மனோபாவத்தை மாற்றி, கருத்தடையில் பங்கேற்கச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.

இந்த கருத்தடை மற்றும் கருக்கலைப்பு முறைகளை வேறொரு தளத்திலும் விவாதிக்கப்பட வேண்டி வருகின்றது.

அது பாதுகாப்பான உடலுறவு....

குஷ்பு, சுகாசினி போன்றவர்களால் இன்று ஒழுக்ககேட்டை வலியுறுத்துவதற்கு இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்ற முக்காடு தேவைப்பட்டதை தமிழகம் கொதித்து எழுந்து தடுத்து விட்டதென்றாலும் - இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்பதை நாம் கம்பளத்தின் அடியில் தள்ளிப் புதைத்து விட முடியாது.

இன்று எய்ட்ஸ் பெருமளவில் தாக்கி இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதுவே போதுமானது - பாதுகாப்பான உடலுறவு தேவை என்பதை வலியுறுத்த. தன்னை மட்டும் பாதுகாக்க அல்ல, தன் பெண்ணை - மனைவியைப் பாதுகாக்கவும் தான்.

இந்தப் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆண்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்படி பொறுப்பேற்கையிலேயே அதுவும் கூட கருத்தடைக்கான வழிமுறையாக ஆகக்கூடும்.

இனியும் ஆண்கள் எல்லாவித பொறுப்புகளையும் பெண்கள் மீதே சுமத்தி விட்டு, விட்டேத்தியாக சுற்றிவரலாம் என்று நினைத்தால், பின்னர் அதுவே தங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்காக பெண்களைப் போராடத் தூண்டும் - அப்பொழுது பெண்கள் வைக்கும் கோரிக்கைகளில் நிரந்தர கருத்தடை எதிர்ப்பும் பாதுகாப்பான உடலுறவுத் தேவையும் அடக்கி இருக்கும்.

ஆண்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் - கருத்தடை, மற்றும் பாதுகாப்பான உடலுறவிற்கான உத்தரவாதத்திற்கு.