நிகழ்வு
செய்திகளும் விமர்சனங்களும்.....
About Me
- Name: நண்பன்
- Location: துபாய், அமீரகம், United Arab Emirates
Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்
Saturday, July 30, 2005
Tuesday, July 26, 2005
நீங்கள் அழகாக வேண்டுமா?
டோனி பிளேர் செய்வது போல செய்தால் போயிற்று....
வருடத்திற்கு 1800 பவுண்டுகள் செலவழிக்கிறார் - தன் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ள. செலவழிப்பது தன்னுடைய கையிலிருந்து அல்ல - மக்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான்.
ஒரு ஆங்கிலேயப் பெண்மணி வருடத்திற்கு எத்தனை செலவழிக்கிறார் தெரியுமா? -சராசரியாக 195 பவுண்டுகள் -ஒரு பெண்ணை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகம் செலவு செய்கிறார் தன் அலங்காரத்திற்காக.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட G8 மாநாட்டின் முக்கிய தீர்மானம் - ஆப்பிரிக்காவில் வறுமையை ஒழிப்பது என்பது. சரி வறுமை என்றால் என்ன என்று தெரியுமா? ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டாலரை விட குறைவாக சம்பாத்தியம் செய்தால் அந்த நபர் வறுமைக் கோட்டிற்குக் கீழாக இருக்கிறார் என்று அர்த்தமாம். நமது நாட்டில் இன்னமும் அதன் அளவு குறைவு அதாவது மாதம் ரூ 500/-க்கு குறைவான வருமானம் என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழ். வலைப்பூக்களிலே படித்தது தான்.
இப்பொழுது கணக்குப் போட்டுப் பாருங்கள் - ஒரு பவுண்டு - கிட்டத்தட்ட ரூ.70/- என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1800 x 70 = 126000.
இதை 500 ஆல் வகுத்துப் பாருங்கள் - 252.
அதாவது அண்ணன் பிளேர் அரிதாரம் பூச செலவழிக்கும் பணத்தில் 252 நபர்களை ஒரு மாதத்திற்கு வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வந்திருக்கலாம். அல்லது 21 நபர்களை ஒரு வருடம் முழுமைக்கும் வறுமை கோட்டிற்கு மேலாக வைத்திருக்கலாம்.
இந்தத் தலைவர்களெல்லாம் கூடிப்பேசி ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப் போகிறார்கள் என்று பேசுவது எத்தனை நகைப்புக்கு இடமளிக்கிறது தெரியுமா?
ஏழ்மையை எள்ளி நகையாடும் இந்த மமதை என்று ஒழியுமோ, இறைவா!!!!
Monday, July 25, 2005
ஓடிப்போய்த் தான் கண்ணாலம் பண்ணிக்கலாமா?
நீங்கள் குஜராத்காரராக இருந்தால் - குஜராத்தை விட்டே ஓடினால் தான் கண்ணாலம் பண்ணிக்க முடியும்.
அப்படி என்ன ஆயிற்று என்றா கேட்கிறீர்கள்?
நீங்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் இழுத்துக் கொண்டு ஒடிப்போய் ஜோடியாய் திருமணப்பதிவாளர் முன் நின்றாலும், அவர் திருமணத்தைப் பதியவைக்கப் பெற்றவர்களிடத்தில் இருந்து 'நோ அப்ஜெக்ஷன் லட்டர்' கேட்பார். அதைக் கொடுத்தால் தான் கல்யாணம் பண்ணி வைப்பார். இல்லையென்றால் 'நோ' கல்யாணம் தான்!.
காதலர்கள் எல்லாம் திகைத்துப்போய் போர்க்கொடி தூக்க, பெற்றவர்களெல்லாம் ஆதரவுக் கொடி தூக்க கடைசியில் கலாச்சார போலிஸாக தன்னை நிலைஇருத்த முயலும் இந்துத்வா பரிவாரங்கள் காதலர்கள் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு விருப்பமிருந்தால் பெற்றவர்களின் சம்மதம் பெற்ற கடிதத்தைக் கொடுக்கலாம் என்று கூறிவிட்டனர். (என்ன லாஜிக்ன்னு மோடியைக் கேட்டால் தான் தெரியும்?)
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது இந்த முயற்சி பெற்றவர்களைத் திருப்திபடுத்தும் ஒரு முயற்சியாகத் தான் தோணும். ஆனால் கொஞ்சம் ஆழமாக, இந்த கலாச்சார போலிஸ் பரிவாரங்களின் முழுப் பிண்ணனியும் அறிந்தவர்களின் பார்வையில் பார்த்தால் இதில் ஒரு பெரிய கலாச்சார மோசடி இருப்பதும் புரியும். - எப்படி என்கிறீர்களா?
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான வீர் பாரத் தல்வார் இந்துவின் மூன்று அடையாளங்களாகச் சொல்பவை மூன்று.
1. வருணமுறையை ஏற்றுக் கொள்ளுதல்
2.பசுவை வணங்குதல்
3.இறந்தவரைப் புதைக்காமல் எரித்தல்.
இதில் கடைசி இரண்டிற்கும் இங்கு சம்மதமில்லை. இந்த வருணமுறையை ஏற்றுக் கொள்ளுதல் - இதற்கு முற்றிலும் எதிரான சமாச்சாரம் என்ன தெரியுமா?காதல் !!! ஆக இந்தக் காதலை ஒழித்துக் கட்டாவிட்டால் இந்த காலத்தில் வருணமுறையைக் காப்பாற்றுவது என்பது மிகக் கடினம். காதலை ஒழிக்கிறேன்என்று நேரடியாகக் கிளம்பிவிட்டால் மக்கள் தங்களை 'பொறம்போக்கு' என்று சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பின்னர் கனிசமான இளசுகளின் ஆதரவையும் இழக்க வேண்டி வரும். பின்னே - யாருக்காவது காதல் வந்துவிட்டால் முதல்ல கட்சில இருந்துள்ள ராஜி வைப்பான்! ஆக எப்படி இந்த பிரச்னையைகைகொள்வது என்று யோசித்த இந்துத்வா கும்பல் கலாச்சார போலிஸ் உடையணிந்து பெற்றோரின் மனம் குளிரும்படி செய்வதாக நடித்துக் கொண்டே நைஸாக மோடி வித்தை அடிக்கடி காட்டும் மோடி நாடு வழியாகவே கால் நுழைத்துப் பார்த்திருக்கிறது. நல்ல வேளையாக இளைஞர்கள் விழிப்பாக இருந்து முனையிலேயே
கிள்ளிவிட்டார்கள்.
இல்லையென்றால் திருமணம் என்ற பந்தத்தையே தங்கள் விருப்பத்திற்காக கொச்சைப்படுத்தியிருக்கும் இந்த இந்துத்வா கும்பல்.
தாவூதும் மியாண்டட்டும் சம்பந்திகள்....
தாதா தாவூதும் காக்கா மியாண்டடும் ஒரு வழியா சம்பந்தியாகிட்டாங்க. துபாயில் நேற்று நடந்து முடிந்த அவர்கள் குடும்பத் திருமணத்தில் மெஹ்ரூஹ் இப்ராஹிம் ஜுனாய்த் மியாண்டட்டைத் திருமணம் செய்து கொண்டார். துபாயின் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் 1500 நபர்கள் அமரக்கூடிய ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுத் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு அழைப்பு பல இந்தியத் தலைவர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் பாலிவுட் வட்டாரத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது.சுமார் 500 பேராவது மும்பையில் இருந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் தாவூத் வட்டாரத்திற்கு இருந்ததாக ஊகம். புர்ஜ்-அல்-அரப் என்ற உலகின் ஒரே ஏழு நட்சத்திர விடுதியில் 150 அறைகள் எடுக்கப்பட்டதாகவும் சமையலறை தாவுத்தின் ஆட்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும்கதைகள் வந்து பரவியது. எங்கள் பணியிடம் இந்த விடுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தான்.
ஆனால் செய்தித் தாள்களில் இத்தகைய செய்திகள் ஏதுமில்லை. வந்த செய்திகளெல்லாம் - யார் யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த - இண்டர்போல் இந்திய போலிஸ் துபாய் போலிஸ் இவர்களைப் பற்றித்தான். இவர்களுடன் தாவுத்தின் சீருடை அணிந்த பணியாட்கள். ஆனால் இவர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை. மொத்தத்தில் திருமணத்திற்கு உள்ளே சென்றவர்களை விட வெளியே நின்றவர்கள் அதிகம். பத்திரிக்கைகாரர்களை புகைப்படமெடுக்க அனுமதிக்கவில்லை. அதிலும் இந்தியாவில் இருந்து சென்ற தொலைக்காட்சிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மாப்பிள்ளை வந்துஇறங்கும் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் வந்திருக்கிறது.
இத்தனை சிரமத்திற்குள்ளாகித் தான் மியாண்டட் தன் மகனின் திருமணத்தை நடத்தி முடித்திருக்க வேண்டுமா? வேறு நல்ல இடத்தில் பெண் பார்த்திருக்கக்கூடாதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. மியாண்டட் ஒரே வரியில் கூறிவிட்டார் - சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கத் தான் இந்தத் திருமணம் - அதாவது தாவுத்தின் மனைவியரில் ஒருவர் - மியாண்டட்டின் தாய்வழி உறவு. ஆனால் இது ஒரு சமாளிப்பு என்றே தோன்றுகிறது.
இந்தத் திருமணம் காதல் திருமணம் கூட. ஆம். மணமக்கள் இருவரும் லண்டனில் படிக்கும் போதே பழக்கம் உண்டு.
நமக்குள் எழுவது ஒரே கேள்வி தான் - இந்த திருமணத்தை ஏன் மியாண்டட் தவிர்க்க வில்லை? இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு. மத எல்லைகளைத் தாண்டியும் அவரை நேசித்த இந்தியர்கள் உண்டு. அதிலும் ஷார்ஜாவில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சேட்டன் சர்மா வீசிய பந்தை எந்த பதட்டமுமில்லாமல் ஒரே தூக்காக தூக்கி ஆறு ரன்களாக்கி வெற்றி பெற்ற அந்த தருணத்தின் பிரமிப்பு இன்னமும் பலர் மனதில் பசுமையாக இருக்கத்தான் செய்யும். அன்று என்னைப் போன்றவர்கள் அவரை காக்கா மியாண்டட் என்றே அழைத்தோம்.
இந்தியாவின் வர்த்தக நகரத்தைச் சிதைத்த தாவூத்தோடு இன்று ஜோடி சேர்ந்து விட்ட பின்பு இனி மியாண்டட் என்றே சொல்வோம். காக்கா இல்லை. காக்கா என்றால் அண்ணன்.
Tuesday, July 19, 2005
வலைப்பூக்களுக்குத் தடை வரலாம்....!!!
தனி மனிதர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களை நேர்மையாக வெளிப்படுத்தவும், கதை கவிதை கட்டுரை என்ற இலக்கிய ரசனைகளையும் படைப்புத் திறனை மேலும் மேலும் ஊக்குவிக்கவும் பயன்படட்டுமே என்று உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்ட வலைப்பூக்கள் அந்த எல்லைகளை மீறுகிறது.
ஆழ்மனதில் உள்ள வக்கிரங்கள், துவேஷங்கள், பண்பாடற்ற மொழி நடை என ஒரு சமுதாயம் கூடி வாழும் நோக்கிற்குப் பங்கம் விளைவிக்கும் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கி, சுதந்திரத்தையும் கருத்து கூறும் உரிமையையும் துஷ்பிரயோகம் செய்து வலம் வருவதை வன்மையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும், அத்தகைய வலைப்பூக்களை தடுத்து நிறுத்தவும் வேண்டும் என்று இந்த இணையசேவை புரிந்து வரும் அமீரகத்தின் எட்டிசலட் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
ஆம், அரசல்ல - சேவை செய்யும் நிறுவனமே இந்த முடிவை மேற்கொள்கிறது.
ஆச்சரியமான விஷயம் இதுவரையிலும் ஒரு வலைப்பூவைக் கூட அது தடை செய்ததில்லை. முதன்முதலாக அது ஒரு வலைப்பூவை தடை செய்திருக்கிறது. அந்த வலைப்பூவின் பெயர் - சீக்ரெட் துபாய் டயரி. துபாயின் வலைப்பூவர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கியது அது. துபாயின் வலைப்பூக்களில் கொஞ்ச நேரம் சுற்றித் திரிந்தால் போதும் - அதன் உண்மை வடிவம் தெரிந்து விடும். 50 சதவிகிதத்திற்கும் மேலாக அங்கு புழங்குவது - கல்லூரி பாடங்கள் தான். மாணவ மாணவியர் தங்கள் கல்லூரி பாடங்களையும் ப்ராஜக்ட் செயல் திட்டங்களையும் வலையில் வைத்திருக்கிறார்கள். மற்ற படிக்கு ஆவேசமான ஆபத்தான கருத்துகள் எதுவும் கிடையாது. அந்த சீக்ரெட் துபாய் டயரி என்ற பூ வந்து சேரும் வரை. அது வந்ததும் துபாய் வலைப்பூவர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது - சடுதியில். காரணம் - தடாலடியாக கருத்துகள் ஆனால் அதே சமயம் அரசிற்கும் ஒத்துப் போகும் வழியாக பதிவுகள். பிறகு அதற்கு ஏன் தடை வந்து விட்டது?
அதில் வந்த ஒரு கவிதை. என்னவென்று பத்திரிக்கைகள் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த கவிதை பதிவு பெற்றதுமே பலரும் அந்த கவிதையைக் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உடனே தடை செய்து விட்டனர். பின்னர் தான் முதல் பத்தியில் குறிப்பிட்டது போல ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் வலைப்பூவின் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பதால் எப்படி தரமான வலைப்பூக்களை மட்டுமே பயனில் இருக்கச் செய்வது என்பது தான் இப்பொழுது விவாதமே.
பல துபாய் அன்பர்கள் தடை செய்யப்பட்டது குறித்து ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். கண்டனம் தெரிவிக்க முடியாது. இப்படித் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டியதிருக்கிறது தங்கள் எதிர்ப்பைக் காட்ட. நாசூக்காக. கூடவே வலைப்பூக்களின் நன்மைகள் குறித்தும் பத்தி பத்தியாக எழுதுகின்றன பத்திரிக்கைகள். அதிலும் குறிப்பாக அமெரிக்கா ஈராக்கில் புகுந்த பொழுது ஒரு இராக்கிய பொறியாளரின் வலைப்பூவை சர்வதேச வலைப்பூவர்கள் அனைவரும் படித்ததை நினைவு கூறுகின்றனர். சலாம் பாக்ஸ் (Salam Pax) என்ற அந்தப் பொறியாளார் பாக்தாத் நகரத்தில் இருந்து எழுதி பதிந்து வைத்த பதிவுகள். அதுபோல சமீபத்தில் லண்டன் குண்டுவெடிப்புகளின் போதும் நேரிடையாகக் கண்டு தங்கள் வலைப்பூவில் அந்த நிகழ்ச்சியைப் பதிந்து வைத்திருந்ததை நானே படித்திருக்கிறேன்.
முதல் தகவல் அறிக்கை என்பது மாதிரி இருக்கிறது. அதுவும் கண்ணால் கண்ட காட்சி அல்லது நேரிடையான அனுபவம் என்பதால் செய்திகள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றன. அதனால் இந்த வலைப்பூக்களைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தே ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன.
அமீரகத்தில் மட்டுமல்ல -
தமிழ்மணத்திலும் இத்தகைய சில குறைந்த பட்ச கட்டுப்பாடுகள் தேவை என்றே தெரிகிறது. இல்லையென்றால் தமிழ் வலைப்பூக்கள் மத, இன, சாதி வெறியர்களின் கூடாரம் என்றே ஆகிவிடும் போலிருக்கிறது.
கனிப்பார்களா?
படைப்பாளியை மிரட்டும் கோகோ கோலா நிறுவனம்!!!
சென்னையில் தான்.
கதை இது தான் -
ஒரு வறண்டு கிடக்கும் அடிபம்பு பக்கத்தில் காலி பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டு தண்ணீர் வண்டிக்காகக் காத்திருக்க, அந்த சாலையின் அடுத்த பக்கத்தில் பிரம்மாண்டமான விளம்பரத் தட்டி - கோகோ கோலா குடியுங்கள் என்று எழுதப்பட்டு நிற்க - அந்த காட்சி ஒரு சிறப்பான முரண் என்று புகைப்படக்காரருக்குத் தோன்றியிருக்கிறது. உடனே புகைப்படம் எடுத்து விட்டார். அத்தோடு போயிருந்தால் பரவாயில்லையே, உடனே அதை 20 அடிக்கு 30 அடி பிரதி எடுத்து சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் காட்சிக்கு வைத்து விட்டார்.
இது அவருடைய வழக்கம் தானாம் - கண்ணில் அகப்படும் சமுக பிரச்னைகளைப் புகைப்படமெடுத்து பின்னர் அதை பெரிதாக சாலை ஒன்றில் மக்கள் பார்வைக்கு வைத்து விடுவது.
இந்தக் காட்சி குளிர்பான நிறுவனத்தின் கவனத்திற்கு வந்ததும் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் - தங்கள் பொருளை நையாண்டி செய்கிறார் என்று. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு - 20 லட்ச ரூபாய் வரைக்கும் போடுவோம் என்று மிரட்டல் விட்டிருக்கின்றனர்.
புகைப்படக்காரர் முடியாது என்று மறுத்துவிட்டார். "இது என்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதாகும். ஒரு நிஜமான காட்சியை புகைப்படமாக்குவதில் தவறேதுமில்லை. மன்னிப்பு கேட்க முடியாது. வழக்கைச் சந்திக்க தயார்" என்று அறிவித்தும் விட்டார்.
இது இவ்வாறிருக்க, உள்ளூர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குழுவினரும் தன்னார்வ தொண்டர்களும் களத்தில் குதித்து விட்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் வியாபார முறை கேடுகளைப் பற்றி விமர்சித்ததுடன் நில்லாமல் அந்த நிறுவனத்தால் எத்தகைய பாதிப்புகள் வந்திருக்கின்றன என்றும் பட்டியலிடுகின்றனர். - 'நிலத்தடி நீரை அவர்கள் இரவு பகல் பாராது உறிஞ்சிக் கொள்வதால் அவர்களுடைய பாட்டிலிங் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் தண்ணீர் வெகு ஆழத்திற்குப் போய்விடுகிறது. பொதுமக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை' என்பது தான் அந்த புகார்.
புகைப்படமெடுத்தவருக்கோ இந்த பிண்ணனி விவாகாரமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. 'ஒரு நல்ல உயிர்ப்புள்ள காட்சியாக கண்ணில் தெரிந்த பொழுது அதை புகைப்படமெடுத்தேன். அதன் பிண்ணனியில் உள்ள இத்தனை விவகாரங்களும் நான் அறிந்திருக்கவில்லை' என்கிறார்.
எப்படியோ அறிந்தோ அறியாமலோ அவரால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வியாபார புரட்டுத் தனங்களை சர்வதேச செய்தியாக்க முடிந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றிய செய்திகள் என்றால் உடன் வந்து விடுகிறது - ஏதோ நாம் அவர்களைக் கொடுமைப்படுத்துவது மாதிரி ஒரு பாவனை செய்து விடுகிறார்கள்.
சரி யார் அந்த புகைப்படக்காரர்?
ஷரத் ஹக்சர்.
யார் இவர்?
கோகோ கோலாவின் விளம்பரத்திற்கு புகைப்படமெடுத்து தருபவர் தான்!!!
அடுத்தவர் படைப்பைச் சுட்டுத் திண்ணாலும் தன்னை படைப்பாளி என அங்கீகரிக்க வேணுமென அடம்பிடிக்கும் நம் திரையுலக மேதாவிகள் - ஒரு உண்மையான படைப்பாளிக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வருவார்களா?
Wednesday, July 13, 2005
கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலாச்சாராம் தெரியாது.
பிரபல நடனமணி சோனல் மான்சிங் தான் கூறியிருக்கிறார்.
நாட்டியப் பெண்மணிக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அப்படி என்ன தகராறு என்று கேட்கிறீர்களா? தெரிந்து கொள்ளுங்கள். சோனல் மான்சிங், சங்கீத் நாடக் அகாடமியின் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுவிட்டார்.
அதனால் வந்த பொருமல் தான் இது. அது சரி மத்திய அரசு காங்கிரஸினுடையதாச்சே, ஏன் இவர் கம்யூனிஸ்ட்டுகளின் மீது பாய்கிறார்?
தான் தூக்கப்பட்டதற்குக் காரணம் - சகாவு ஹரிகிஷேன் சிங் சுர்ஜித் தன் கட்சிப் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரை தான் என்கிறார். முந்தைய அரசால் நியமனம் செய்யப்பட்ட அரசு சார் துறைத் தலைவர்கள் எல்லாம் அரசு மாற்றம் ஏற்பட்டவுடன் தாங்களாகவே முன்வந்து, தங்கள் பதவியை விட்டு விலகி விட வேண்டும் என எழுதியிருக்கிறார். இது தான் தன்னைப் போன்ற கலைஞர்களைப் பதவியை விட்டுத் தூக்க காரணமாக இருந்திருக்கிறது என்கின்றார்.
சுர்ஜித் நடைமுறையில் இருந்து வரும் ஒரு மரபைத் தான் கூறினார் என்பது அரசியல்வாதியல்லாத சோனலுக்கு தெரிந்திருக்காது. அவர் தனது பதவியைத் துரக்க மனமில்லாது போனது அத்தனை பெரிய தவறில்லை தான். ஆனால், ஒரு அரசு தான் சார்ந்த கொள்கைகளை பரப்ப, விவாதிக்க நியமனம் செய்யும் பொருட்டு முன்னே இருந்தவர்களை விலகக் கோருவது என்ன தவறு என்று அறியாமல் இருக்கிறாரே அங்கே தான் அவரது அறியாமை நகைக்க வைக்கிறது.
அவர் தான் எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லையே, பின் ஏன் நான் பதவி விலக வேண்டும் என்று கேட்கிறார். தன்னை நியமித்தது ஜனாதிபதி தானே என்றும் கேட்கிறார். எண்ணங்களின் வண்ணங்களுக்கு, ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி அரசு பரிந்துரைப்பவர்களை நியமனம் செய்கிறார். ஆனால், இத்தனை கேள்வி கேட்கும் இவர், கடைசியில் கூறுகிறார் - "நான் எனது தேசத்தை நேசிக்கிறேன். அதனுடைய கலாச்சாரத்தையும், மரபுகளையும் நேசிக்கிறேன். அந்த கலாச்சாரத்தின், மரபின் வண்ணம் காவியாக இருக்கும்பொழுது, எனது வண்ணமும் காவி தான்" என்கின்றார்.
ஆஹா...!!!
இந்தியாவை நேசிப்பவர்கள் எல்லாம் காவி வண்ணத்தில் இருந்தால் மட்டும் தான் முடியும், அதன் கலாச்சார மரபுகளை பேணுவதற்கு காவி வண்ணத்தால் தான் முடியும் என்று தீர்க்கமான முடிவுக்கே வந்து விட்ட அம்மணி, உங்களை ஏன் பாஜகா நியமித்தார்கள் என்று இப்பொழுது அல்லவா புரிகிறது?
கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலாச்சாராம் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், காவியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறதே, அது போதும் அவர்கள் இந்தியர்கள் என்ற தகுதியைப் பெறுவதற்கு.....!!!
Monday, July 11, 2005
இஸ்ரேலும், லண்டன் குண்டு வெடிப்புகளும்....
நடக்கப் போகிறது என்று ஆரூடம் கூறி எதிர்பார்த்திருந்தது நிகழ்ந்தே விட்டது.
அதுவும், வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருந்த நகரத்தின் மீது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உரிமம் பெற்ற இரண்டு நாட்களுக்குள், மீண்டும், அல்கொய்தா தன்னுடைய playing the spoilsport அசட்டுத்தனத்தைக் காட்டி விட்டது.
வழக்கம் போல கருத்துகள், விமர்சனங்கள், வசைபாடுதல்கள், அனுமானங்கள் எல்லாம் வலம் வருகின்றன. தீவிரவாதம் ஒரு கேன்சர் என்று விமர்சித்தாயிற்று. சரி, தீவிரவாதம் ஒரு புற்று நோய்தான். ஆனால், அதற்கு தீர்வு என்ன? அந்த புற்று நோய் எங்கிருக்கிறது? எங்கிருந்து அதை அகற்றும் பணியை ஆரம்பிப்பது?
அடிபட்டு, நொந்து போன டோனி பிளேருக்கு புற்று நோயின் ஊற்றுக் கண் எங்கிருக்கிறது என்றே தெரிகிறது - அவர் கூறுகிறார், "தீவிரவாதத்தின் ஊற்றுக் கண், மத்திய கிழக்கின் இழுத்துக் கொண்டே போகும் நெருக்கடியில் இருக்கிறது. லண்டன் குண்டுவெடிப்புகள் மேற்கத்திய நாடுகளின் மீது தொடுக்கப்பட்ட, விரிவான தீவிரவாத யுத்தத்தின் - ஒரு பங்காக இருக்கிறது"
(The Middle East Conflict is one of the underlying causes of terror. London bombings are a part of a wider terror war being waged against the Western countries)
அடிபட்ட வேகத்தில், ஆழ்ந்த வலியில், பிளேர் உண்மையைக் கூறிவிட்டார். இந்த உண்மையைத் தான் மற்ற வல்லுநர்களும் கூறுகின்றனர்.
சிகாகோ பலகலைக் கழகத்தின் Political Science துறையின் பேராசிரியராக இருக்கும் ராபர்ட் பேப் எழுதுகிறார் - " 9/11 போல வாணவேடிக்கைகள் நிகழ்த்தாதினால் அல்கொய்தா இயக்கம் வலுவிழந்து போனது என்று அமெரிக்க அரசியல் தலைமை எண்ணுமானால், அது முற்றிலும் தவறாகும். அதுபோல மிகப்பெரிய தாக்குதல்கள் நிகழ்த்துவதை விட, சிறு சிறு தாக்குதல்கள் மூலம், மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கி, அதன் மூலம் அந்த நாடுகளை பணிய வைப்பதுவும், அதன்மூலம், அமெரிக்காவை தனிமைப்படுத்துவதும், அரபு மண்ணின் மீதான யுத்தங்களில் அதிக பொருட்செலவையும், மன உளைச்சலையும் அமெரிக்காவிற்கு ஏற்படுத்துவதும் தான் அவர்களது திட்டம். "
ஆனால், அமெரிக்க அதிபர் புஷ் இதை உணராமல், ஏதோ அல்கொய்தா இயக்கம் பலவீனப்பட்டு சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபடுகிறது என்று பேசி வருவது உண்மையை மட்டும் மறைப்பது ஆகாது - பிரச்சினையின் மையத்தையே அவர் இன்னும் காண மறுக்கிறார் என்பதாகும். (புஷ்ஷின் புத்திசாலித்தனமும், IQவும் இப்போதெல்லாம் உலகப் பிரசித்தி பெற்றதாகி வருகிறது. நாளை முட்டாள் என்று யாரையாவது சொல்ல வேண்டுமானால், என்னடா சுத்தா புஷ்ஷா இருக்கியே என்றே சொல்லலாம்.)
தாக்குதல் நடத்தும் strategic planningஐ மாற்றிக் கொண்டார்கள் சரி. ஆனால் அவர்களுக்கு எங்கிருந்து தாக்குதல் நடத்துவதற்கு தொடர்ந்து ஆட்கள் கிடைக்கிறார்கள்? அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்க சிறைகளில் படும் கொடுமைகளை எல்லோரும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கத் தானே செய்கிறார்கள் - பின்னே எப்படி இவர்களால் தொடர்ந்து, இப்படிபட்ட motivated உறுப்பினர்களைப் பெற முடிகிறது? இங்கு தான் பிளேர் கூறிய கருத்துகள் வலுப்பெறுகிறது - பிரச்னையின் அடியாழம் - மத்திய கிழக்கு நெருக்கடி. இது ஒரு பொதுப்படையான கருத்தாகவே இருந்தாலும், கொஞ்சம் உள்நோக்கிப் பார்த்தால், இதில் இருக்கும் உண்மை தெளிவாகப் புரியும்.
முதன் முதலாக - ஒரு மேலை நாட்டு அரசியல் தலைமை - மத்திய கிழக்கின் நெருக்கடியைத் தீர்க்காது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறது. மத்திய கிழக்குப் பிரச்னை என்பது நிலப்பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது உலகினர் அறிந்தது. அதாவது பிளேர் மறைமுகமாக, கூற விழைவது - இந்தத் தீவிரவாதம் எழுந்தது ஒரு இனத்தின் நிலப்பிரச்னை தானே தவிர, மதப் பிரச்னை அல்ல என்பதைத் தான். முதன்முதலாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று குறிபிடுவதை விட்டு விட்டு, நிலத்தின் மீதான, உரிமை கோரும்போராட்டத்தினால் விளைந்த தீவிரவாதம் என்பதை ஆமோதித்துள்ளார்.
ராப்ர்ட் பேப் தனது கட்டுரையில் மேலும் கூறுகிறார் " அல்கொய்தா இயக்கம் தனது இயக்கத்தினரை அமெரிக்க நட்பு நாடுகளிலிருந்தே பெறுகிறது - அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து அல்ல. துருக்கி, எகிப்து, பாக்கிஸ்தான், இந்தோநேஷியா, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து தான், இந்த இயக்கத்தினருக்கு தொடர்ந்த்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனரே தவிர, மற்ற எதிரி நாடுகளிடமிருந்து அல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்று அவர் குறிப்பிடுபவை - இரான், லிபியா, சூடான். இந்த நாடுகளிலிருந்து ஏன் பெருமளவில் இஸ்லாமியர்கள் அல்கொய்தா இயக்கத்தில் இணையவில்லை? இங்குள்ள இஸ்லாமியர்கள் பக்தியில் குறைந்தவர்களா? இல்லை. அல்கொய்தாவினால், இங்குள்ள இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. இந்த மண்ணில் இருப்பவர்கள் அராபியர்காள் அல்ல என்பது மட்டுமல்ல, இங்கெல்லாம் அமெரிக்கா ராணுவம் நிலை பெற்றிருக்கவில்லை.
ஆம், அல்கொய்தா இஸ்லாத்தை முன்வைத்து தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக மண்ணை மீட்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதாவது, எங்கெங்கு, அமெரிக்கா ராணுவம் இறங்குகிறதோ, அங்கெல்லாம், இளைஞர்களை இந்த இயக்கம் எளிதாக ஈர்க்கிறது. இதுவே சவுதியிலிருந்து, ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து, பெரும் இளைஞர் பட்டாளாம் இந்த இயக்கத்தில் சேருவதற்குக் காரணம்."
ஆக, அல்கொய்தாவின் போராட்டம், நிலமீட்சி போராட்டமே அன்றி, மத காப்பு போராட்டம் அல்ல. அவர்களுடைய தாக்குதல்களை எல்லாம் தொடர்ந்து நோக்கி வந்தால், ஒரு உண்மை புலப்படும்: அரபு மண்ணில் நிற்கும் ராணுவத்தை அனுப்பிய நாடுகள் மீது தான் அது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா,ஸ்பெய்ன், லண்டன். அடுத்தது? ஆரூடம் கூறுபவர்கள் குறிப்பிடும் நாடுகள் - இத்தாலி அல்லது டென்மார்க். ஏன் ஈராக்கிற்கு படை அனுப்பியதால்.
அல்கொய்தாவின் அடிப்படையே நீலமீட்சி எனப்படும் பொழுது - எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிப்பது பாலஸ்தீனியப் பிரச்னை. அடுத்து, அமெரிக்க படைகள் நிலைகொண்டிருக்கும் சவுதி, குவைத், இராக், ஆஃப்கானிஸ்தான் இங்கிருந்தெல்லாம் படைகள் விலகிக் கொள்வது.
இவைகள் தான் அல்கொய்தாவின் போராட்டத்தை நிலைபெற வைத்துக் கொண்டிருக்கும் ஆயுதங்கள். முதலில் இது தான் பிரச்னை என்பதே அமெரிக்காவிற்குப் புரியவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக ரைஸ் என்ற பெண்மணியை அனுப்பி வைத்து, அரபு நாடுகளில் ஜனநாயகம் மலர வேண்டும் என்ற தேவையற்ற விவாதத்தைக் கிளப்பி விட்டு விட்டுப் போயிருக்கிறார். அதாவது, ஒரு பிரச்னையை மறைக்க, மற்றொரு பிரச்னையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்திற்காக பின்லேடன் போராடுவது போலவும், அந்த ஜனநாயகம் வந்து விட்டால், தீவிரவாதத்தை விட்டுவிட்டு, தேர்தலில் போட்டியிட வெளியில் வந்து விடுவான் போலவும், அமெரிக்கா நம்புகிறது.
பிரச்னையின் ஆதாரத்தை விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்து குட்டையைக் குழப்புவதென்ற முடிவிலேயே இயங்குகிறது. அப்படியென்றால், இந்தப் பிரச்னைக்கு முடிவு தான் என்ன? மத்திய கிழக்கு நெருக்கடிக்கு ஒரு தீர்வு.
தீவிரவாதத்திற்கு இது தான் தீர்வு என்று தெரியுமா? எதிரெதிர் அணியினருக்குத் தெரிகிறது. அதாவது இஸ்ரேலுக்கும், நிலமீட்சித் தீவிரவாதிகளுக்கும். இப்பொழுது தான் மூன்றாவதாக, ஒரு மேலை நாட்டு தலைமை உணர்ந்திருக்கிறது - மத்தியக் கிழக்குத் தீர்வு வெறுமனே இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை மட்டுமல்ல, அது, தீவிரவாதத்தின் தீர்வாகவும் இருக்கப் போகிறது என்று.
ஆனால், தீர்வு கிடைக்குமா?
அத்தனை எளிதாகக் கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏன்? இஸ்ரேல் இந்த தீர்வை ஒரு போதும் விரும்பாது. முதலில், இதை நீலமீட்சிக்கான தீவிரவாதம் என்று கூட அது ஒப்புக் கொள்ளாது. இதற்கு ஆதாரம் - டோனி பிளேரின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "அமெரிக்கா, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் நடத்தப் பெற்றது போன்ற, ஒரு விரிவான தளத்தில், தீவிரவாதப் போரை லண்டனில் இயங்கும் தீவிர வாதிகள் கடந்த வாரம் நிகழ்திதியுள்ளனர் - மேல நாட்டு கலாச்சாரத்திற்கு எதிராக. " இவ்வாறு கூறியவர் யார் தெரியுமா? இஸ்ரேலின் துணை அதிபர் - எஹுத் ஒல்மெர்ட். (the terrorist operating in London last week were doing it as a part of a comprehensive terrorist war against the Western civilisation similar to what they have done in America, similar to what they've done in Spain, similar to what they've done in Spain)
இங்கு டோனி பிளேர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும், எஹுத் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. பிளேர் கூறும் பொழுது Western Country என்கிறார். மற்றவரோ Western Civilisation என்கிறார். மேலை நாட்டு கலாச்சாரம் என்று நிலைபெறச் செய்ய, யூதர்களின் பிரதிநிதி மெனக்கெடுகிறார் - ஏனென்றால், ஒரு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று வாதிடுவதன் மூலம், இந்த தீவிரவாதிகள் கலாச்சாரத்தின் அடிப்படையில் - கிறித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைக் கலாச்சாரத்தை எதிர்க்கும், இஸ்லாமிய கலாச்சாரத்தை தத்துவார்த்தமாக கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்று நிறுவ முடியும். அதை விட்டு விட்டு, நிலப்பரப்பைக் குறிக்கும், country என்ற பதத்தை பயன்படுத்தினால், இந்த தீவிரவாதத்தை நீல மீட்சிக்கான தீவிரவாதம் என்று அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு அங்கீகரித்தால், அது தனக்குத் தான் தலைவலி என்று தெரியும். அதனால், மறந்தும் கூட, இதை நீலமீட்சிக்கான தீவிராவாதம் என்று சொல்லிவிடவோ, அப்படி ஒரு கருத்து தோன்றி விடவோ, விடக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகக் கவனமாக காய்களை நகர்த்தும்.
ஆமாம், இஸ்ரேல் மட்டும் தான் இதை இஸ்லாமிய மதத்தோடு சம்பந்தப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்க நண்பர்கள் உண்டு. அவர்களைக் கொண்டு, பத்திரிக்கை நண்பர்களைக் கொண்டு, இஸ்ரேல் மிகத் தீவிரமாக இந்த நீலமீட்சிக்கான தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரமாகக் காட்டுவதற்கு தன்னால் முடிந்த வரையிலும் போராடும். அழுகுணி ஆட்டம் ஆடும். ஏனென்றால், தீவிரவாதத்தின் உண்மை ஊற்றுக் கண்ணை அடையாளம் கண்டு, அது தான் பிரச்னைக்குத் தீர்வு என்று அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், அன்று தன்னுடைய இருப்பிற்கே ஆபத்து என்று அதற்குப் புரியும்.
உண்மைகளை மூடி மறைத்து, மாயையைகளை உருவாக்கி, அதன் மூலம் தொடர்ந்து மேலை நாட்டு அரசுகளை தவறான பாதையில் செலுத்துவதை இஸ்ரேல் தொடர்ந்து செய்யும். அதை உலகம் தீவிரவாதம் என்று இதுவரையிலும் நம்பியதில்லை. ஆனால், இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் பொழுது, உண்மைகளை உலக மக்கள் புரிந்து கொள்ளும் பொழுது, உண்மையான தீவிரவாதி இஸ்ரேல் தானே தவிர, இஸ்லாம் அல்ல என்பதும் புரிந்து விடும்.
உண்மையின் முதற்கீற்றுகள் இப்பொழுது தான் மேலை நாடுகளின் கரைகளைத் தொடத் துவங்கியிருக்கிற்றது.
Sunday, July 10, 2005
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
GULF NEWS ஜுலை 10, 2005 தேதியிட்ட நாளிதழில் வந்துள்ள செய்தி தான் நீங்கள் மேலே கண்ட தலைப்பு. செய்தி இது தான் -
A businessman who misappropriated his wife's money to buy two Ferraris and a Maserati car has been jailed. The 35 year old UAE national businessman, identified as M.F., will have to spend a year in jail, a court has ruled.
செய்தியின் விரிவாக்கமாவது -
வியாபாரம் செய்கிறேன் - உன் பணத்தைக் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டான் கணவன் தன் மனைவியிடமிருந்து, பவர் ஆஃப் அட்டார்னியுடன். வாங்கிக் கொண்டு பல வியாபாரங்கள் நடத்துகிறேன் என்று போக்குக் காட்டிக் கொண்டே, சொகுசுக் கார்களை வாங்கிக் கொண்டான். (பின்னர் அதை விற்று லாபம் பண்ணிக் கொள்ளலாம் என்ற சப்பைக் கட்டு வேறு.) மனையின் 3 மில்லியன் திர்ஹம்களை இப்படியாக செலவு செய்ய, விழித்துக் கொண்ட மனைவி, பல்வேறு கணக்குகளையும் சரி பார்க்க, அப்பொழுது தான் அவன் தன்னை ஏமாற்றுகிறான் என்று அறிந்து கொண்டாள். பின்னர் அவனுடன் சமாதானமே செய்து கொள்ள முடியாது என்ற நிலைமையில் விவாக ரத்து செய்து விட்டு, நீதிமன்ற வாசல்படி ஏறுகிறாள் - தன் சொத்தை மீட்டுத் தருமாறு.
கவனிக்க - முதலில் பெண்ணான அவளால் தன் கணவனை விவாகரத்து செய்ய முடிகிறது. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே. தாலி என்ற புனித செண்டிமெண்டெல்லாம் செல்லுபடியாகாது. இதுவே பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு முக்கிய உரிமை தான். இன்று பல நாடுகளிலும், குடியாட்சி ஏற்பட்டு பின்னரே சட்டம் இயற்றப்பட்டு, சொத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், இந்தியா போன்ற ஆணாதிக்கம் மிக்க நாடுகளில் அது ஏட்டளவில் தான் உள்ளது. இஸ்லாத்தில் இந்த உரிமைகள் 1400 வருடங்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது. ஏட்டளவில் இல்லை. இஸ்லாமிய சட்டத்தின் படி நடக்கும் ஆட்சியில், ஒரு பெண்ணால், தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது. பெண்ணினுடைய சொத்தை, வருமானத்தை அவள் விரும்பினாலன்றி வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக எந்த ஆண்மகனுக்கும் அதில் உரிமை கிடையாது. அவளாக விரும்பிக் கொடுக்கும் வரை.
இதுபோன்று தான் - பெண்களுக்கு தட்சிணை கொடுப்பதும். ஒரு பெண்ணை மணந்து கொள்பவன் - அவள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த போதுமான அளவிற்கு பொருள் கொடுக்க வேண்டும். பின்னாளில், கணவனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலோ அல்லது அவனால் கைவிடப்பட்டாளோ, அந்தப் பெண் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு பொருள் கொடுக்கப்படவேண்டும். இப்படி முன்னேற்பாடகவே பொருள் கொடுக்கப்பட்டு விட்டதனாலே தான், இஸ்லாம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் பின்னர் தங்கள் முன்னால் கணவரிடம் - இந்நாள் அந்நியனிடம் கையேந்துபவளாக இருக்கக் கூடாது என்று ஜீவனாம்ச கோரிக்கையை அனுமதிக்கவில்லை.
இப்படியாக பல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு - 1400 வருடங்களுக்கு முன்பாகவே.
ஆனால், இன்று பலரும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்ற வீணான அவதூறுகளையும் பரப்பி வருவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத பட்சத்தில், தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் - வீண் கற்பனையைத் தவிருங்கள்.
நன்றி.
அமீரகத் தொழிலாளிகளின் மதிய ஓய்வு....
வெப்பம் மிகுந்த மாதங்களான ஜூலை, ஆகஸ்டு - இந்த இரண்டு மாதங்களிலும் வெளிப்புற வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, மதியம் 12.30 முதல் மாலை 4.30 வரை ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை வெயில் தாக்கும் புற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், ஒப்பந்த வேலை எடுத்துச் செய்யும் பெருநிர்வாகங்களும், அவர்களது பிரதிநிதிகளும் மிகக் கடுப்பாகி உள்ளனர். முதல் தாக்குதலாக, சிலர் குழுவாக இணைந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் - தாங்கள் பெருத்த நட்டத்திற்கு ஆளாவோம் என்றும் அதுபோக இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பல பணிகளும் கால தாமதத்திற்கு ஆளாகும் என்றும், அதனால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளன.
இந்த முதல் கட்ட தாக்குதலை மிக வெற்றிகரமாக சமாளித்து விட்டனர் அதிகாரிகள். உங்கள் லாபத்தை விட, தொழிலாளர்களின் உடல் நலம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு நான்கு மணி நேரமே வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறோம் என்றும் கூறி வந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இந்த உத்தரவை அமுல் படுத்துகிறார்களா என்று கண்டறிய காவல் துறையின் ஹெலிகாப்டர் ஊர்திகளில் இருந்து வானில் பறந்தவாறே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் சென்றுள்ளனர். இதை நாங்கள் பணி புரியும் பகுதியான துபாய் மெரினாவில் முதல் இரு நாட்கள் கண்டோம்.
எந்த வகையிலும் மாற்ற முடியாது என்றதும், பல நிர்வனங்கள் தங்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளன. அரப்டெக் என்ற கட்டிட நிர்மாண நிறுவனம் தங்கள் வேலைநேரத்தை அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கி மதியம் 12.00க்கு முடித்துக் கொண்டு, அடுத்த பணி துவக்கத்தை மாலை 4.00 முதல் அதிகாலை 2.00 வரைக்கும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் பணியை நிறைவு செய்து கொடுக்கவில்லையென்றால் - கட்ட வேண்டிய அபராதத் தொகையில் தள்ளுபடியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். !
இதுபோல மற்றுமொரு வகையிலும் அரசு இந்த நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளிக்கு கூடுதல் பணி கொடுக்கக் கூடாது என்று தான். முதல் வகை உத்தரவிற்கு இருந்த ஆதரவு இந்த இரண்டாவது வகை உத்தரவிற்குக் கிடைக்கவில்லை - காரணம் இது தொழிலாளியின் வருமானத்தில் கை வைக்கிறது. தொழிலாளர் உடல் நலத்திற்குக் கேடானது என்ற அதே காரணத்திற்காகத் தான் இது என்றாலும், நேரடியாகத் தங்கள் வருமானம் குறைகிறது என்பதனால், தொழிலாளிகள் மத்தியில் இதற்கு வரவேற்பு குறைவு தான். அதே சமயம் - நிர்வாகங்களும் வற்புறுத்தப்படுகின்றன - அதாவது, கூடுதல் பணி கொடுப்பதை விட, கூடுதலாக பணியாட்களை அமர்த்துங்கள் என்று நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இந்த கூடுதல் பணியாளர்களும் - ஒரே நாட்டில் இருந்து என்றல்லாமல் எல்லா நாடுகளிலிருந்தும் பரவலாக வரவேண்டும் என்றும் அந்த வகையில் தான் தேவையான விசாக்கள் வழங்கப்படும் என்றும் கூறிவிட்டனர். இப்பொழுது எங்கள் நிறுவனத்திலேயே முழுக்க முழுக்க இந்தியர்கள் என்ற நிலை மாறி இப்பொழுது சிங்களம். ஈழம், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என்று சர்வதேச மயமாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த சட்டங்களுடன், மற்றொரு சட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது - ஆம், அமீரகத்தின் மன்னராக கடந்த வருடம் முடிசூடிய திரு கலீஃபா, குழந்தைகளை ஒட்டக சவாரியில், பயன்படுத்தக் கூடாது என்று திட்ட வட்டமாக அறிவித்து, அந்த மாதிரி வரவழைக்கப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். உலக நாடுகள் பல நாட்களாக கூவி கூவி சொன்னாலும் இப்பொழுது தான் இது நடைமுறைக்கு வந்துள்ளது. அதிலும் இந்த வழக்கம் உள்ள அனைத்து அரபு நாடுகளிலும் முதலாவதாக.
இப்பொழுது அமீரகத்தை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லுவதை விட, முன்னேற்றத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்ட, மற்றைய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவே கருதலாம். ஏன் அதற்கு மேலும் கூட கருதலாம். ஏனென்றால் சில ஜனநாயக நாடுகளில் கிடைக்காத அனுகூலங்கள் மன்னராட்சி என்ற முறையிலும் கிடைக்கிறது. குறிப்பாக சட்டம் நிறைவேற்றப்படுவது - அறிவித்த அடுத்த நிமிடத்தில் இருந்தே நடைமுறைக்கு வந்து விடுகிறது. மேலும் அமைச்சர்களாகப் பணி புரியும் பலரும் இளைஞர்கள் - ஒரு பெண்மணியும் கூட உண்டு.
துடிப்பாக செயல்படும் இந்த இளைஞர் பட்டாளம் - தங்கள் நாட்டை முன்னேறிய நாடுகளில் ஒன்றாகப் பார்ப்பதை லட்சியமாகக் கொண்டே பணிபுரிகிறார்கள். விரைவிலேயே, அந்த நிலையை எட்டி விடுவார்கள் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துகிறேன்.